Last Updated : 28 Sep, 2014 09:01 AM

 

Published : 28 Sep 2014 09:01 AM
Last Updated : 28 Sep 2014 09:01 AM

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும்?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவருக்கு முன்பாக ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வழக்குகள் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகின்றன.

முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானாவின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 1999-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது ஹரியானாவின் 18 மாவட்ட பள்ளிகளுக்காக 3206 பேர் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஊழல் நடந்ததாக கடந்த ஜூன் 2003-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா எம்.எல்.ஏ., இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் ஓம் பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் சிங், ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 10 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான நாளில் கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலாவும் அவரது மகன் அஜய் சிங்கும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டனர். அந்த வழக்கில் இருவருக்கும் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

கடைசியாக கடந்த ஜூன் 3-ம் தேதி சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இது பிறகு சவுதாலாவின் உடல்நிலையைக் கருதி செப்டம்பர் 26-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. கடந்த 25-ம் தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து அக்டோபர் 17-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் வழக்கு

பிஹார் முதல்வராக இருந்தபோது ரூ.900 கோடி கால்நடைதீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலுவுக்கு ஜார்க்கண்ட் மாநில சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரியபோது மறுக்கப்பட்டது. இதே வழக்கு தொடர்பாக மற்றொருவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் லாலு பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்?

தசரா விடுமுறைக்குப் பிறகு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார்.

இந்த நடைமுறைகளின்படி ஜாமீன் கிடைக்க சுமார் ஒரு மாதம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இடையில் தசரா விடுமுறை வருவதே தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x