Last Updated : 17 Sep, 2018 04:54 PM

 

Published : 17 Sep 2018 04:54 PM
Last Updated : 17 Sep 2018 04:54 PM

என் வேதனை யாருக்கும் வரக்கூடாது; சாதியத்தை எதிர்த்துப் போராட உயிர் வாழ்வேன்- ஆணவக் கொலையால் உயிரிழந்தவரின் கர்ப்பவதி மனைவி கண்ணீர்

''என் வேதனை யாருக்கும் வரக்கூடாது; என் கணவரை விட்டு உயிர்வாழ முடியாது. ஆனால் என் குழந்தைக்காகவும் சாதியத்தை எதிர்த்துப் போராடவும் உயிர் வாழ்வேன்'' என்று ஆணவக் கொலையால் உயிரிழந்தவரின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்த இளைஞர், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் தந்தையாலே கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) அடக்கம் செய்யப்பட்டது.

ஆணவக் கொலையின் பின்னணி

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார் (வயது 23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்தபோதே நண்பர்கள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவிவன் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

அம்ருதா கர்ப்பமானதால், மாருதி ராவ் மிகுந்த கோபமடைந்தார். இந்நிலையில் அம்ருதா, மருத்துவப் பரிசோதனைக்காக சமீபத்தில் பிரனய் குமாருடன் மருத்துவமனை சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது . இதில் அவர் வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

இதுகுறித்துப் பேசிய 5 மாதக் கர்ப்பிணி அம்ருதா, ''பிரனய் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால் என் குழந்தைக்காகவும், சாதிய முறைமையை எதிர்த்துப் போராடவும் உயிர் வாழ்வேன். இந்த வேதனையை யாரும் அனுபவிக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

'துரோகம்'

உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் பிரனயின் சகோதரர் அஜய் கூறும்போது, ''என்னுடைய சகோதரனுக்கு நடந்தது நம்பிக்கை துரோகம். மாருதி ராவை சிறையில் அடைக்கவேண்டும்'' என்றார்.

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பிரனயின் உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவர்களும் தன்னார்வ அமைப்புகளும் 'ஜெய் பீம்', 'லால் சலாம்' என்று முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x