Last Updated : 07 Sep, 2018 08:46 AM

 

Published : 07 Sep 2018 08:46 AM
Last Updated : 07 Sep 2018 08:46 AM

தன் பாலினத்தவர் திருமணத்தை ஆதரிக்க முடியாது: ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து

தன்பாலின உறவு குற்றமல்ல, ஆனால் தன் பாலின திருமணத்தை ஆதரிக்க முடியாது என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

வயது வந்த இருவரின் விருப்ப அடிப்படையிலான தன்பாலின உறவு குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தன்பாலின உறவு குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.  இது குற்றமல்ல என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதேநேரம், ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் என ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது இயற்கைக்கு மாறானது. எனவே, இதுபோன்ற உறவுக்கு ஆதரவில்லை என்ற எங்களது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

மேலும் இதுபோன்ற உறவை அங்கீகரிக்க இந்திய சமூகம் பாரம்பரியமாக மறுத்து வருகிறது. அனுபவங்கள் மூலம் மனிதர்கள் பாடம் கற்றுக்கொள்வது வழக்கம். எனவே, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தி சமூக மற்றும் உளவியல் ரீதியாக கையாள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் வரவேற்பு

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ட்விட்டரில் நேற்று கூறியதாவது:

தன்பாலின உறவை குற்றமாகக் கருதும் ஐபிசி 377-வது பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் சிறப்பு வாய்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது இயற்றப்பட்ட இந்த சட்டம் இன்றைய நவீன காலத்துக்கு பொருந்தாமல் இருந்தது. அத்துடன் தனி மனிதனின் அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பாலியல் நோக்கு அடிப்படையில் பாகுபாடு காட்டும் வகையிலும் இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இது தாராளவாத மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை நோக்கிய மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். சமத்துவ மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான தொடக்கமாக இந்தத் தீர்ப்பு அமையும் என நம்புகிறோம். தன்பாலின உறவாளர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. பாராட்டு

தன்பாலின உறவு குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது. தன்பாலின உறவாளர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முதல்படியாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என்றும் ஐ.நா. நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x