Published : 19 Sep 2018 02:47 PM
Last Updated : 19 Sep 2018 02:47 PM

டெல்லியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 24 லட்சம் நிதி திரட்டிய நெட்டிசன்கள்

 டெல்லியில் பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக 24 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியைச் சேர்ந்தவர் அனில் (37). இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 14 ஆம் தேதி தாப்ரி பகுதியில் பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய அதில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். அப்போது, பிணவறையில் அனிலின் சிறுவயது மகன் அவரது அருகே நின்று அழுதுகொண்டிருந்த புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அவரது இறுதிச்சடங்குக்குக் கூட பணம் இல்லாமல் அவரது குடும்பம் அவதிப்படுவதாக தகவலும் வெளியானது.

இதையடுத்து, ட்விட்டரில் இப்புகைப்படத்தைக் கண்ட பலரும் அனிலின் மனைவி ராணியின் வங்கிக் கணக்கில் பணம் சேர்த்தனர். இதுவரை, அவரது வங்கிக் கணக்கில் 24 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

அனில் இறப்பதற்கு சரியாக 6 நாட்களுக்கு முன்னர்தான், அவருடைய 4 மாதக் குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராணி கூறுகையில், “எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் குழந்தைகளை இந்தப் பணத்தின் மூலம் நன்றாகப் படிக்க வைத்து அவர்கள் நல்வழியில் வாழ வகை செய்வேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x