Last Updated : 06 Sep, 2018 08:36 AM

 

Published : 06 Sep 2018 08:36 AM
Last Updated : 06 Sep 2018 08:36 AM

புதிய எதிரியை உருவாக்கும் பாஜக..

பயனுள்ள முட்டாள்கள் (யூஸ்புல் இடியட்ஸ்) என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது... ஆனால், இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்வாவை ஆதரிப்பவர்கள், இடதுசாரி சிந்தையாளர்களை, நகரங்களில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்' என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது அவர்களுக்குப் பெயர் ‘நகர்ப்புற நக்சல்கள்'. இந்த நகர்ப்புற நக்சல்களைத்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பயனுள்ள முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக வாக்குறுதி அளித்தபடி வளர்ச்சி இல்லை என்பது அக்கட்சிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் யாரையாவது காட்டி பயமுறுத்தி, ஓட்டு வாங்க நினைக்கிறது. தேசத் துரோகிகளாக யாரையாவது காட்டி பயமுறுத்தி னால், பாஜக அரசின் தோல்விகளை மறந்து விட்டு, தேச ஒற்றுமைக்காக தனக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என பாஜக நினைக்கிறது.

முஸ்லிம்கள் நாட்டின் விரோதிகள் என்ற பாஜகவின் கோஷம் எடுபடவில்லை. முஸ்லிம் என்றாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள்.. காஷ்மீர் பிரிவினைவாதிகள்.. தீவிரவாதிகள்.. லஷ்கர் இ தொய்பா, அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பயனில்லை. ஏனெனில் இங்குள்ள முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, முஸ்லிம்களைப் பார்த்து இந்துக்கள் யாரும் பயப்படுவதில்லை. மூன்றாவதாக, பதற்றத்தைத் தொடர்ந்து வைத்திருக்க, எல்லையில் துல்லிய தாக்குதலைப் போன்று தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் சீனா வேட்டுவைத்து விட்டது. பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சும்மா விட மாட்டோம் எனக் கூறிவிட்டது.

இந்தியாவைப் பாதுகாக்க பாஜக, புதிய எதிரியை உருவாக்க வேண்டும். மாவோயிஸ்ட்கள் அதற்குப் பொருந்தி வருவார்கள். அவர்களை இஸ்லாமியருடன் இணைத்துவிட்டால் இன்னும் சரியாக இருக்கும் என நினைக்கிறார்கள். இப்படி அத்தனை தீய சக்திகளும் இந்தியாவை அழிக்க நினைக்கும்போது, வேலைவாய்ப்பு பற்றிப் பேச முடியுமா? பேசினால், உங்களுக்கு தேசபக்தியே இல்லையா என்பார்களே...

கடந்த 1980-களில் ராஜீவ் காந்தி வீழ்ச்சிக்குப் பிறகு, சாதியால் பிரிந்து கிடப்பவர்களை மத ரீதியாக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸால் இணைக்க முடியுமா என்ற கேள்வி, அடுத்து நாட்டை யார் ஆள்வது என்பதை முடிவு செய்தது. அயோத்தி மூலம் அத்வானி அதை சாதித்தார். ஆனால், 2004-ல் அது நீர்த்துப் போனது. அப்போது நரேந்திர மோடி பயன்பட்டார். அவருக்கு இருந்த நற்பெயரும் கவர்ச்சியும் இந்து வாக்காளர்களைக் கவர்ந்தது. அதோடு, வலுவான அரசு, வளர்ச்சி ஆகிய இரண்டு வாக்குறுதிகளும் சேர்ந்து வெற்றியைத் தேடித் தந்தன. ஆனால், இப்போது இருக்கும் நிலையில் இதையே மீண்டும் சொல்லி வெற்றிபெற முடியாது என்பது மோடிக்கும் தெரியும்.

அதனால்தான் புதிய எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் களையும் முஸ்லிம்களையும் இணைத்தால் அது கிடைத்துவிடும். 2019 தேர்தலுக்குள் நாடே பயங்கர ஆபத்தில் இருக்கிறது என கதை கட்டி விடலாம் என நினைக்கிறது பாஜக.

கொஞ்சம் பின்னோக்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் போவோம். இடதுசாரிகள் கொண்டாடும் மிகச் சிறந்த உருது கவிஞரான அகா ஷாகித் அலியின் நினைவு தின கொண்டாட்டம் அங்கு நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் குறித்து விவாதிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் உள்ளதாக முதலில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அடுத்ததாக, ‘கடவுள் விரும்பினால் இந்தியா துண்டு துண்டாக உடையும்' என்ற கோஷத்துடன் கூடிய வீடியோ வெளியானது. இரண்டு கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர்கள் மீதும் ஒரு முஸ்லிம் மாணவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது.

அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாயின. ‘காஷ்மீரில் இந்தியா சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்பதை இந்த உலகமே அறியும்..' என ஜேஎன்யூ பல்கலையின் ஒரு பேராசிரியர் பேச, சுற்றியிருக்கும் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் வீடியோ வெளியானது. இதையடுத்து, இடதுசாரி புரட்சிகர சிந்தனையாளர்கள், தேச விரோத முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவைத் துண்டாக்க சதி செய்கிறார்கள் என்ற புதுக் கதையைப் பரப்பினார்கள். இதன்மூலம் வில்லன்கள் கூடும் இடமாக ஜேஎன்யூ வளாகம் சித்தரிக்கப்பட்டது.

காஷ்மீர் பிரிவினைவாதத்தைப் பேசி இடதுசாரி சிந்தனையாளர்கள் பாதி வேலையைத்தான் செய்தார்கள். மீதி வேலையை, மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ஆதரவான டிவி சேனல்கள் பார்த்துவிட்டன. நாடே ஆபத்தில் இருப்பதாகப் புரளி கிளம்பியது. இந்தியா ஒன்றும் பீங்கான் பாத்திரமல்ல. கோஷம் போட்டும், போஸ்டர் ஒட்டியும், எதிர்ப்புக் கவிதை எழுதியும் இந்தியாவை உடைக்க முடியாது. ஆனால், வாக்காளர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். எந்தக் கட்சியும் சாராத 2 சதவீத நடுநிலை வாக்காளர்கள் இந்த வாதத்தில் மயங்கினாலே, பாஜக நினைப்பது நடந்துவிடும்.

காஷ்மீரில் பொது வாக்கெடுப்புக்கும் நக்சல்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதும் அவசியம்தான். ஆனால், அவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். கொல்கிறார்கள், மடிகிறார்கள். அமெரிக்கா சிறைத் தண்டனை விதித்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஐஎஸ்ஐ தீவிரவாதி, குலாம் நபி பாயின் விருந்தில் இடதுசாரி சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். அவரை காஷ்மீர் தேச பக்தன் எனப் பாராட்டுகிறார்கள். இதனால்தான் அரசும் அத்தனை காஷ்மீரியையும் தேசத் துரோகியாகப் பார்க்கிறது. 20 ஜெலட்டின் குச்சிகளாலும் 5 ஃபியூஸ் வயர்களாலும் புரட்சியைக் கொண்டு வந்துவிட முடியுமா?

சோவியத் யூனியனால் வீழ்த்த முடியாத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புரட்சிகர முஸ்லிம் களால் வீழ்த்த முடியும் என உலகம் முழுவதும் இடதுசாரித் தலைவர்கள் நம்புகிறார்கள். இந்தியா விலும் அதேபோல் நடக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வரும் காஷ்மீரிகளும் பஸ்தர் பழங்குடியின மக்களும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அநியாய மாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆயுதம் எடுத்த அடுத்த நொடி, உங்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுவிடும். இந்தப் போரில் அரசாங்கம் தான் வெல்லும். அரசாங்கம் பலமானது என்பதால் அல்ல, மக்களின் ஆதரவு அதற்குத்தான் இருக்கும் என்பதால். அரசுக்கு எதிராக ஏன் இவர்கள் போராடுகிறார்கள் என்ற காரணத்தை அறிந்தவர்கள் மக்களில் ஒரு சிலர்தான். இதற்கிடையில் நீதிமன்றக் கண்டனம், அலைக்கழிப்பு ஆரம்பமாகும். சட்டரீதியாக, இந்த விஷயத்தில் மோடி அரசு கண்டிப்பாகத் தோற்றுத்தான் போகும். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் நோக்கம் அதுவல்ல.

இடதுசாரி சிந்தனையாளர்களின் புரட்சிப் போராட்டங்களால் யார் பயனடைவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். மோடியோ அல்லது அவர் கட்சியினரோ உங்களுக்கு நன்றி சொல்லி பாராட்டி கடிதம் அனுப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் இடதுசாரிகள் அல்ல, ‘பயனுள்ள முட்டாள்கள்'.

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x