Last Updated : 07 Sep, 2018 08:55 PM

 

Published : 07 Sep 2018 08:55 PM
Last Updated : 07 Sep 2018 08:55 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?: ஒரேநாளில் 14 மாதங்களில் இல்லாத அதிகரிப்பு: விலை குறையுமா?

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றும் முடிவு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மட்டும் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 50 காசுகள்வரை உயர்த்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 48 காசுகளும், டீசல் லிட்டருக்கு 47 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்தன.

இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.13 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.76.17 காசுகளாக அதிகரித்தது. டெல்லியில் பெட்ரோர் ரூ.79.99 காசுகளும், மும்பையில் ரூ.87.39 காசுகளாக அதிகரித்தது. டீசல் லிட்டர் ரூ.72.07 காசுகளாகவும், டெல்லியில் ரூ.76.51 காசுகளாகவும் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ளக் கடந்த ஆண்டு மே மாதம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையிலும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக டாலரின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.85 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.3.30 காசுகளும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், பால்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி டிரைவர்கள் என பல்வேறு பிரிவினர் டீசல் பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 காசுகளை உற்பத்தி வரியாகவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 காசுகளாகவும் மத்தியஅரசு விதிக்கிறது. இது தவிர மாநிலங்கள் தங்கள் பங்கிற்கு வாட் வரியும் விதிக்கின்றன. இதுதவிர மாநில அரசுகளும் வாட் வரி என்ற பெயரில் வரி வசூலிக்கின்றன. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா அரசு பெட்ரோல் மீதான வாட் வரி 39.12 சதவீதமும், தெலங்கானா அரசு டீசல் மீது வாட் வரி அதிகபட்சமாக 26 சதவீதமும் விதிக்கிறது. டெல்லியில் பெட்ரோல் மீது 27 சதவீதமும், டீசல் மீது 17.24 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது.

கடந்த 2014 நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரை 9 முறை பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏறக்குறைய பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.77 காசுகளும், டீசலில் ரூ.13.47 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இப்போதுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வில் பாதிக்கு மேல் இருப்பது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும், உற்பத்தி வரியும்தான். இந்த வரியை மக்களின் நலன் கருதி குறைக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

தற்போது மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரியும், மாநில அரசு விதிக்கும் வாட் வரியும் சேர்த்து 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. ஆதலால், ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவரக் கோரி எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. அவ்வாறு ஜிஎஸ்டி வரி என்பது அதிகபட்சமாக 28 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அவ்வாறு ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலை கொண்டுவரப்படும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் பாதிக்கும் என்ற காரணத்தால் அதை அமல்படுத்துவதில்லை என்று பொருளாதார வல்லுநர்களும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர்.

செய்தது என்ன?

ஆனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் படுவீழ்ச்சி அடைந்த நேரத்தில் மத்திய அரசு உற்பத்தி வரியை மட்டும் 9 முறை தொடர்ந்து அதிகரித்து லாபத்தைப் பெருக்கிக்கொண்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் எழுப்பியவுடன், பெயரளவுக்கு 2 ரூபாயைக் குறைத்தது மத்தியஅரசு.

கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2014-15ம் ஆண்டு முதல் 2017-18 ஆண்டுவரை உற்பத்தி வரி வசூல் ரூ.99 ஆயிரத்து 184 கோடியாகும். இது முந்தைய காங்கிரஸ் அரசு வசூலித்த தொகையைக் காட்டிலும் 2 மடங்கு உயர்வாகும்.

அதேபோல மாநிலஅரசுகள் வசூலிக்கும் வாட் வரி கடந்த 2014-15ம் ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 157 கோடியாக இருந்த நிலையில், 2017-18-ம் ஆண்டுகளில் ரூ. ஒருலட்சத்து 84 ஆயிரத்து 91 கோடியாக உயர்ந்துள்ளது.

வரி குறைக்கப்படுமா?

உற்பத்தி வரி குறைக்கப்படுமா என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த 2 நாட்களுக்கு முன் நிருபர்கள் கேட்டபோது, உற்பத்தி வரி குறைப்புக்கு வாய்ப்பே இல்லை. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஊசலாட்டமே விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, உற்பத்தி வரியைக் குறைத்து மக்களுக்குச் சுமையில்லாமல் பார்த்துக்கொண்டோம். ஆதலால், மத்தியஅரசு உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x