Published : 29 Sep 2014 09:19 AM
Last Updated : 29 Sep 2014 09:51 AM
இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை செவ்வாய்க்கிழமை வெளியாக இருக்கிறது. இதை பொறுத்தே பங்குச் சந்தையின் வர்த்தக நிலவரம் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்தார்கள். மேலும் செப்டம்பர் மாத வாகன விற்பனை தகவல் இந்த வாரத்தில் வெளியாக இருப்பதால் ஆட்டோமொபைல் துறை பங்குகள் வரும் வாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படும். வாகன விற்பனை குறித்த தகவல்கள் புதன்கிழமை வெளியாகும்.
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் அதே சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணமும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்று பொனான்ஸா போர்ட்போலியோ நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராகேஷ் கோயல் தெரிவித்தார். மேலும், சர்வதேச சூழ்நிலைகளும் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் என்றார்.
ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும், அவர்கள் இந்திய சந்தையை நோக்கி வருவார்கள் என்று சியான்ஸ் அனல்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அமன் சவுத்ரி தெரி வித்தார்.
மேலும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி யின் பி.எம்.ஐ. குறியீடு வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. தவிர வரும் வாரத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தசரா பண்டிகை காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை யாகும்.
டெக்னிக்கல் நிலவரம்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 26887 என்ற முக்கியமான புள்ளியை தொட முடியவில்லை. அதனால் வரும் வாரத்தில் சென்செக்ஸ் 26220, 26032 ஆகிய நிலைமைக்கு சரியலாம். ஒரு வேளை சென்செக்ஸ் 25233 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில் பங்குச்சந்தையின் குறுகிய காலம் சரிவிலே இருக் கலாம். ஒரு வேளை சென்செக்ஸ் 26887 புள்ளிகளுக்கு மேலே செல்லும் போது அடுத்த இலக்கு 27354 மற்றும் 27531 ஆகிய புள்ளிகளை தொடலாம்.
நிப்டியை எடுத்துக்கொண்டால் வரும் வாரத்தில் 8032 என்ற நிலையில் அதன் ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இந்த புள்ளியை தாண்டாத பட்சத்தில் 8050 புள்ளியை ஸ்டாப்லாஸ்-ஆக வைத்துக்கொண்டு வர்த்த கர்கள் ஷார்ட் போகலாம். இறங்கு முகத்தில் 7790 மற்றும் 7718 புள்ளிகள் வரை சரியலாம். 7718 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில் 7540 புள்ளிகள் வரை கூட நிப்டி சரியலாம். ஒரு வேளை 8032 புள்ளிகளுக்கு மேலே செல்லும் பட்சத்தில் 8180 மற்றும் 8236 புள்ளிகள் வரை நிப்டி செல்லலாம்.