Published : 06 Sep 2018 08:01 AM
Last Updated : 06 Sep 2018 08:01 AM

கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது பரசுராம் வாக்மோர்தான்: தடயவியல் ஆய்வில் கண்டுபிடிப்பு

பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது பரசுராம் வாக்மோர் தான் என்பது ஓராண்டுக்கு பிறகு, தடயவில் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

அவர் சுட்டுக்கொல்லப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந் துள்ள நிலையில், வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கைதாகியுள்ள அமோல் காலே உள்ளிட்ட 3 பேருக்கு மகாராஷ்டிராவில் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர் கொலை, எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, இவ்வழக்கில் நேரடி தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் போல, பரசுராம் வாக்மோரை நடிக்க வைத்து ஒளிப்பதிவு செய்தனர். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்து துப்பாக்கியால் சுட்ட நபரைப் போல 6 விநாடிகள் அளவுக்கு வீடியோ எடுத்தனர். இந்த இரு வீடியோ காட்சிகளையும் ஒன்றாக இணைத்து உருவாக்கிய காட்சி பதிவை குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வீடியோவை தடயவியல் நிபுணர்கள் ‘கெய்ட்' முறையில் ஆராய்ந்தனர். அதில் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றவரின் உருவ அமைப்பும், பரசுராம் வாக்மோரின் உருவ அமைப்பும் சரியாக பொருந்தியது என ஆய்வு அறிக்கையை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றவரின் உயரம் 5 அடி 2 அங்குலம் என கணக்கிடப்பட் டது. வாக்மோரும் அதே உயரம் உள்ளார். கொலை நடந்த அன்று வாக்மோர் கவுரி லங்கேஷ் வீட்டின் அருகேயுள்ள சீகே ஹள்ளியில் தங்கி இருந்தது தொலைபேசி நெட்வொர்க், வீட்டு உரிமையாளரின் வாக்குமூலம் ஆகியவை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்மோர் தான் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x