Last Updated : 26 Jun, 2019 02:15 PM

 

Published : 26 Jun 2019 02:15 PM
Last Updated : 26 Jun 2019 02:15 PM

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: அல்போன்ஸ் பெருமிதம்

சிறுபான்மை மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பாக இருந்ததைக் காட்டிலும் வேறு எந்த ஆட்சியிலும் பாதுகாப்பாக இருந்திருக்க முடியாது என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. கே.ஜே. அல்போன்ஸ் பேசினார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மாநிலங்களவையில் இன்று நடந்தது. இதில் பங்கேற்று பாஜக எம்.பி. கே.ஜே.அல்போன்ஸ் பேசியதாவது:

 " பிரதமர் மோடி மிகப்பெரிய ஜனநாயகவாதி. இதற்கு முன் இருந்த எந்த பிரதமரைக் காட்டிலும் இவர் ஜனநாயகவாதித்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், தேவாலயத்தின் மீது தாக்குதல்கள் நடந்தன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதா. நாட்டில் எங்காவது கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டும், தேவாலாயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கேள்விப்பட்டதுண்டா.

மோடியின் ஆட்சியைக் காட்டிலும் வேறு எந்த ஆட்சியிலும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்திருக்க முடியாது. நாட்டில் உள்ள மக்களில் 99 சதவீதம் பேருக்கு வீடுகளில் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது, 7.5 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 19 கோடி பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது, எளிதாக தொழில் செய்யும் நாடுகள் வரிசையில் முன்னேறியுள்ளோம். இவை அனைத்தும் மோடியின் ஆட்சியில் வந்தது "

இவ்வாறு அல்போன்ஸ் தெரிவித்தார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஜார்க்கண்டில் முஸ்லிம் இளைஞர் ஜெய் ஸ்ரீராம் கூறுமாறு அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு கோஷமிட்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாமநபி ஆசாத் பேசுகையில், " இதுதான் மோடியின் புதிய இந்தியா" என்று கூறி அமர்ந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. வீர் சிங் பேசுகையில், " 45ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் வேலைவாயில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. திட்டமிடப்படாத முடிவுகள், தவறான கொள்கைகள், போன்றவற்றால், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வேலையின்மை 2011-12ம் ஆண்டு 2.1 சதவீதமாக இருந்த நிலையில், 2017-18-ம் ஆணஅடு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் 19 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டிலும் மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்து தனியாருக்கு ஒதுக்கிவிட்டது " எனப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி எம்.பி. வான்சுக் சியாம் பேசுகையில் " வடகிழக்கு மாநிலங்களுக்கு என்ன மாதிரியான சிறப்புத் திட்டம் தரப்பட்டுள்ளது என்பது குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படவில்லை. மேலும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை மேம்படுத்த எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. இந்த நிறுவனங்கள் மோசமானநிலையில் இருக்கின்றன. தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடமுடியாமல் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x