Last Updated : 25 Jun, 2019 07:49 AM

 

Published : 25 Jun 2019 07:49 AM
Last Updated : 25 Jun 2019 07:49 AM

சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடகா முறையீடு; மேகேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது: காவிரி நீரை பெறமுடியாத நிலை ஏற்படும்- பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்காமல் அதை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதேநேரம் அணை கட்டுவதற் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகப்புரா அருகே யுள்ள மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதியதாக‌ அணை கட்ட அம்மாநில‌ அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரி வித்துள்ள நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.25 கோடி செலவில் மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கையை தயாரித்தது. மேலும், அணை கட்டுவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் கோரவும் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கோரி, அந்தத் திட்டத்தின் விரிவான திட்ட வரைவு அறிக் கையை மத்திய நீர்வளத்துறையில் மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இம்மனு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க அனுமதி கோரியது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், மேகேதாட்டு அணை தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கேட்கும் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடும்படி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பழனி சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கர்நாடக அரசின் ‘காவிரி நீரா வாரி நிகாம நியமிதா’ அமைப்பு மேகேதாட்டுவில் அணை மற்றும் குடிநீர் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, கர்நாடகாவுக்கு அனுமதியளிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இக்கடி தத்தை எழுதியுள்ளேன்.

மேகேதாட்டு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரும் கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, காவிரி நடுவர் மன்றம் மற்றும் கடந்தாண்டு பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறைக்கு அறி வுறுத்தல் வழங்கி கர்நாடக அரசின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.

ஏற்கெனவே, மேகேதாட்டு தொடர்பான கர்நாடகாவின் விரி வான திட்ட அறிக்கையை நிரா கரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுடன், தனது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, மேகேதாட்டு திட் டம் ஏற்கக் கூடியதாக இல்லை. கர்நாடகா, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான அணையாக இது வடிவமைக்கப்படவில்லை.

மேலும், தமிழகம் உள்ளிட்ட காவிரி படுகை சார்ந்த மாநிலங் களிடம் முன் அனுமதியையும் கர்நாடகா பெறவில்லை. காவிரி யின் உயர்ந்த படுகைப்பகுதியில் உள்ள மாநிலம், மேகேதாட்டு உள் ளிட்ட எந்தத் திட்டத்தை செயல் படுத்தினாலும், கீழ்ப்படுகையில் உள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையிலான பங்கு நீரை பெற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தச் சூழலில், மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகாவின் காவிரி நீராவாரி நிகாம நியமிதா அமைப்பு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அளித்த திட்ட அறிக்கையை பரிசீலிக்கக் கூடாது என்று, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

மேலும், கர்நாடக அரசின் மேகே தாட்டு திட்டம் குறித்த திட்ட அறிக் கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய நீர் ஆணை யத்துக்கு அறிவுரை வழங்கும்படி மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இதுதவிர, தமிழகம் உள்ளிட்ட காவிரிப்படுகையில் உள்ள மற்ற மாநிலங்களின் முன்அனுமதி பெறா மல், மேற்கொள்ளப்படும் எந்தத் திட்டத்துக்கும் எவ்வித அனுமதியை யும் வழங்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தங்களின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கர்நாடகா முறையீடு

இந்நிலையில் கர்நாடக அரசின் காவிரி நீர் நிர்வாக கழக தலைமை பொறியாளர் கடந்த 20-ம் தேதி மத்திய நீர்வளம், வனம், சுற்றுச் சூழல் ஆகிய அமைச்சகத்தின் இயக் குநருக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் 5252.40 ஹெக்டேர் பரப்பளவில் அணைக்கட்ட முடிவெடுத்துள்ளது. இதற்கான முதல் மற்றும் இறுதிக் கட்ட திட்டவரைவு அறிக்கை ஏற் கெனவே தாக்கல் செய்யப்பட் டுள்ளது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் மாவட்ட மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 மெகாவாட் நீர் மின் சாரத்தை உற்பத்தி செய்து, மின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் பெங் களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் திட்டம் அவசியமாகும்.

மேகேதாட்டு திட்டம் தமிழக எல்லையில் இருந்து 3.9 கிமீ தொலைவில் அமைய உள்ளது. இதன் மூலம் காவிரியில் தமிழகத் துக்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி நீரை எளிதாக வழங்க முடியும். கடலில் வீணாகும் காவிரி நீரை சேமித்து, தமிழகத்துக்கு தேவைப்படும்போது கூடுதல் நீரையும் வழங்க முடியும். மேகே தாட்டுவில் அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தமாக 5252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 4,996 ஹெக்டேர் நிலம் அணையில் நீரை தேக்கவும் 256.40 ஹெக்டேர் நிலம் பிற கட்டுமானங் களுக்கும் தேவைப்படுகிறது. அணை கட்டுவதற்கான 3,181.9 ஹெக்டேர் நிலம் காவிரி வனப் பகுதியிலும் 1,869.5 ஹெக்டேர் ரிசர்வ் வனப்பகுதியிலும் 201 ஹெக் டேர் நிலம் வருமான துறை பகுதி யிலும் கையகப்படுத்தப்படும்.

எனவே, இந்தத் திட்டத்துக்கு மத்திய நீர்வளம், சுற்றுச்சூழல், வனம் ஆகிய அமைச்சகங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்துடன் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் நகல், நடுவர் மன்றத் தீர்ப்பின் நகல், மேகேதாட்டு அணையின் இறுதி திட்ட வரைவு அறிக்கை, அணை அமையவிருக்கும் நிலப்பரப்பின் படங்கள், அணையின் வரைப்படம் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x