Last Updated : 03 Jun, 2019 12:00 AM

 

Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM

என்ஆர்சி பட்டியல் வெளியாவதை முன்னிட்டு அசாமில் வெளிநாட்டினர் தீர்ப்பாயம்: புதிதாக அமைக்க மத்திய அரசு முடிவு

அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அங்கு 1,000 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் லட்சக்கணக்கான வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து, அசாமில் வசிக்கும் உண்மையான இந்தியர்களை கண்டறிவதற்காக தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த என்ஆர்சி பதிவேட்டின் வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில், அம்மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேர் மட்டுமே உண்மையான இந்தியர்கள் என்றும், 40.7 லட்சம் பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, என்ஆர்சி பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் ஆட்சேபங்களை பதிவு செய்யவும், குடியுரிமையையும் நிரூபிக்கவும் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. எனினும், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, என்ஆர்சி பதிவேட்டின் இறுதிப் பட்டியல் ஜூலை மாதம் 31-ம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில், பட்டியலில் இடம் பெற்றவர்கள், அணுகுவதற்கு வசதியாக 1,000 தீர்ப்பாயங்களை அமைத்து தரக் கோரி மத்திய அரசுக்கு அசாம் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, அசாமில் 1000 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதன் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x