Published : 06 Jun 2019 01:17 PM
Last Updated : 06 Jun 2019 01:17 PM

7 பேரில் 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: சோதனையில் உறுதி

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்த 7 பேரில் சோதனையில் 6 பேருக்கு அந்த பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு  கோழிக்கோடு மாவட்டம், சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் லினியும் பலியானார். அதன்பின் கேரள அரசின் தீவிரமான நடவடிக்கை, மருத்துவர்களின் சிகிச்சை ஆகியவற்றால் நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலால் கோழிக்கோட்டில் 14 பேரும், மலப்புரத்தில் 3 பேரும் பலியானார்கள். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில்  நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கி இருந்த 5 பேர் உட்பட 7 பேருக்கும் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவர்கள் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களது ரத்த மாதிரி புனேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும்,கடும் காய்ச்சல் ஏற்பட்டு 314 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த 7 பேரில் 6 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது:

கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

சந்தேகத்தின் பேரில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 7 பேரில் 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகளை சோதனை செய்த புனே சோதனைக் கூடம் இதனை உறுதி செய்துள்ளது. எனினும் அவர்களுக்கு காய்ச்சல் வந்ததற்கான காரணம், வேறு வைரஸ் பாதிப்பு குறித்தும் சோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x