Published : 27 Jun 2019 06:16 PM
Last Updated : 27 Jun 2019 06:16 PM

வாக்களித்தது மோடிக்கு; வேலை கேட்பது என்னிடமா? - கிராம தரிசனம் நிகழ்ச்சியில் குமாரசாமி ஆவேசம்

தேர்தலில் மோடிக்கு வாக்களித்து விட்டு என்னிடம் வேலை கேட்பதா எனக் கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராம தரிசனம் நிகழ்ச்சியில் தொழிலாளர்களிடம் கோபமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் ‘கிராம தரிசனம்' நிகழ்ச்சியை தொடங்கினார். இதற்காக பெங்களூருவில் இருந்து யாதகிரிக்கு ரயிலில் சென்ற அவர், சந்திராகி கிராமத்தில் முகாமிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து பிரச்சினைகளை தீர்க்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் பள்ளிக் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டு, மக்களுடன் எளிமையாக பழகினார். அன்றைய‌ இரவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்குள்ள அரசுப் பள்ளியில் குமாரசாமி தங்கினார். தரையில் அவர் படுத்து தூங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் குமாரசாமி மக்களை ஏமாற்றுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ராய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்றார். அப்போது அங்குள்ள அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குமாரசாமியை சந்திக்க வந்தனர்.

ஆனால் அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவேசமடைந்த தொழிலாளர்கள் முதல்வரை முற்றுகையிட முயன்றனர். எனினும் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து முதல்வர் குமாரசாமி கோபமுற்றார். தொழிலாளர்களிடம் பேசிய அவர், ‘‘தேர்தலில் நீங்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்கிறீர்கள். ஆனால் வேலையை என்னிடம் கேட்கிறீர்கள். இது நியாயமா. நான் அடுத்த கிராமத்துக்கு செல்ல வேண்டும். நான் செல்ல முடியாமல் தடுத்தால் தடியடி நடத்த உத்தரவிடுவேன்’’ எனக் கூறினார்.

பின்னர் தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து முதல்வர் குமாரசாமிக்கு பாஜக  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x