Last Updated : 01 Jun, 2019 03:07 PM

 

Published : 01 Jun 2019 03:07 PM
Last Updated : 01 Jun 2019 03:07 PM

சுற்றுலாப் பயணிகளுக்காக தன் உயிரைவிட்ட வழிகாட்டி: காஷ்மீரில் நெஞ்சம் கனக்கும் சம்பவம்

காஷ்மீரின் படகு விபத்தில் நீரில் அடித்துச்சென்ற சுற்றுலாப் பயணிகளை துணிச்சலோடும் கடமையுணர்ச்சியோடும் காப்பாற்றிய வழிகாட்டி உயிரிழந்த நெஞ்சை கனக்கும் சம்பவம் காஷ்மீரில் நேற்று மாலை நடந்துள்ளது. ஆற்றில் மிதந்து வந்த அவரது உயிரிழந்த உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது

இதுகுறித்த விவரம் வருமாறு:

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்றுமாலை (வெள்ளிக்கிழமை) அங்குள்ள லிட்டர் ஆற்றில் படகுப் பயணம் செய்ய ஐந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ரூஃப் அகமது தார் என்பவர் உடன் வந்தார்.

ஆற்றில் செல்லும்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஐந்துபேரும் நீரில் விழுந்தனர். வழிகாட்டி அகமது தார் இவர்களை அனைவரையும் ஒவ்வொருவராக மீட்டு பத்திரமாக காப்பாற்றி கரைசேர்த்தார். அப்போது எதிர்பாராமல் இவர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இன்று அவரது உடல் ஆற்று நீரில் தென்பட்டது. உயிரிழந்த நிலையில் நீரின் மேலே மிதந்து வந்த அவரது உடல் மீட்கப்பட்டு, சட்டபூர்வமான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு குடும்பத்தாரிடம் இறுதிச் சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியன், வீரதீர செயல்புரிந்து உயிர்த்தியாகம் செய்த சுற்றுலா வழிகாட்டியின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x