Last Updated : 19 Jun, 2019 02:04 PM

 

Published : 19 Jun 2019 02:04 PM
Last Updated : 19 Jun 2019 02:04 PM

பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்: கேஜ்ரிவால், மாயாவதி, மம்தா புறக்கணிப்பு; இடதுசாரிகள் பங்கேற்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால், இடதுசாரிகள் பங்கேற்கின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் பங்கேற்பது குறித்தும், புறக்கணிப்பது குறித்தும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் மட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவை குறித்து விவாதிக்கவும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசவும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் நாளை எம்.பி.க்களுக்கு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தன்னால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று ட்விட்டரில் கூறுகையில், "மின்னணு வாக்கு எந்திரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருந்தால், பங்கேற்றிருப்பேன்" எனத் தெரிவித்தார்.

அதேபோல டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ராகவ் சந்தா பங்கேற்கிறார்.

ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாகப் கே.டி ராமா ராவ் பங்கேற்கிறார்.

இடதுசாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்ப இடதுசாரித் தலைவர் கூறுகையில், " அனைத்து இடதுசாரித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்போம். அதில் ஒரே நாடு, ஒரேதேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்" என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் நேற்று நாடாளுமன்றத்தில் கூடி விவாதித்தன. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆனால், கூட்டத்தில் எந்தவிதமான முடிவும எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சோனியா காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது, "நாளை தான் உங்களுக்கு தெரியப்போகிறதே" எனத் தெரிவித்துச் சென்றார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டத்தில் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டிஆர். பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரியா சுலே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலைவர் என்.கே. பிரேமச்சந்திரன், முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குஞ்சாலிக்குட்டி, கேரள காங்கிரஸ் மாணி தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x