Published : 19 Jun 2019 05:39 PM
Last Updated : 19 Jun 2019 05:39 PM

‘துணை சபாநாயகர் பதவி வேண்டாம்; சிறப்பு அந்தஸ்து போதும்’ - ஜெகன் மோகன் ரெட்டி முடிவு?

மக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மக்களவைத் தலைவர் வேட்பாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஓம் பிர்லா (57) அறிவிக்கப்பட்டார். அவர் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வழங்க பாஜக  முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசினார். ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது.

அக்கட்சி பாஜக கூட்டணியில் இல்லாதபோதும், ஆதரவு கட்சியாகவே இருந்து வருகிறது. மேலும் மத்திய அரசுடன் ஜெகன் மோகன் ரெட்டி நல்லுறவுடன் இருந்து வருகிறார். இதனால் அவரது கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை அளிக்க பிரதமர் மோடி  விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை ஏற்க ஜெகன் மோகன் ரெட்டி விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. துணை சபாநாயகர் பதவியால் எந்த பயனும் இல்லை, மத்திய அரசுடன் இணைந்து செல்வதாக வீணான பேச்சு மட்டுமே எழக்கூடும் எனவே அதனை தவிர்க்க ஜெகன் மோகன் ரெட்டி விரும்புவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது மட்டுமே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x