Last Updated : 14 Jun, 2019 04:03 PM

 

Published : 14 Jun 2019 04:03 PM
Last Updated : 14 Jun 2019 04:03 PM

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேணுகோபால், ஏ.கே.அந்தோணி மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாத தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் நியமிக்காமல் இரு செயல்தலைவர்கள் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரு செயல்தலைவர்களில் ஒருவர் தென் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அதுமட்டுமல்லாமல் இரு செயல்தலைவர்களும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினராக இருப்பார்கள் எனத் தெரிகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவியை ஏற்க முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோனி, கர்நாடக மாநில பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் இருவரும் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏ.கே.அந்தோணியிடம் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டபோது, தன்னுடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், தன்னால் தலைவர்  பதவியை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல கே.சி. வேணுகோபாலிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசியபோது, தற்போது கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருப்பதாகவும், 28 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளதால், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாக கூறி தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இதற்கிடையே இந்திரா காந்தி குடும்பத்தை தவிர்த்து வேறுயாராவது தலைவராக நியமிக்கலாம் என்று மூத்த உறுப்பினர்கள் யோசிக்கையில் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது,

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தீவிரமாக காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x