Published : 12 Jun 2019 08:45 PM
Last Updated : 12 Jun 2019 08:45 PM

ஆந்திர அரசில் ரோஜாவுக்கு முக்கியப் பொறுப்பு; தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக நியமனம்

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவர் கடந்த 8-ம் தேதி முறைப்படி முதல்வர் அலுவலகம் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து 5 துணை முதல்வர்கள், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்கவும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம் செய்தார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிற்பட்ட சமூகத்தினர் சிறுபான்மையினர், காபு சமூகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு  துணை முதல்வர் பதவி என மொத்தம் 5 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி கடந்த 8-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் பதவி 5 பேருக்கு வழங்கப்படுவது இந்தியாவிலேயே இது முதன்முறையாகும். இதில் மூத்த நிர்வாகியான பில்லி சுபாஷ் சந்திரபோஸுக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், அவருக்கு துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட்டது. இதேபோன்று, புஷ்ப ஸ்ரீவாணி என்பவருக்கு பழங்குடி இன வளர்ச்சித் துறை ஒதுக்கியதுடன் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. ஆள்ள நாநி என்பவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதுடன், மருத்துவ துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜாத் பாஷா (சிறுபான்மையினர் நலத்துறை), சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி (கலால் மற்றும் வணிக வரித்துறை) ஆகியோருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தப் பதவியும், அமைச்சர் பொறுப்பும் கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ரோஜா விமானம் மூலம் நேற்று விஜயவாடா வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சாதியின் அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்'' என்றார்.

இந்நிலையில் இன்று ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x