Last Updated : 20 Jun, 2019 12:18 PM

 

Published : 20 Jun 2019 12:18 PM
Last Updated : 20 Jun 2019 12:18 PM

ஒரே தேசம், ஒரே தேர்தல் இப்போது சாத்தியமில்லை: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டம் இப்போதுள்ள நிலையில் சாத்தியப்படாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தை நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் பிரதமர் மோடி முன்மொழிந்தார். இது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

 

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை, ஆனால், இடதுசாரிகள் பங்கேற்ற போதிலும் இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்த செயல்திட்டத்தை வகுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

இதற்கிடையே மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டம் இப்போதுள்ள நிலையில், சாத்தியப்படாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதுகுறித்து பெயர்வெளியிட விரும்பாத தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரே தேசம் ஒரே தேர்தல் சாத்தியமானது, நடைமுறைப்படுத்த முடியும் என்றால், மக்களவைத் தேர்தலில்கூட நடைமுறைப்படுத்தி இருக்கலாம். மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தி இருக்க முடியும். ஆனால், இப்போதுள்ள சூழலில் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாது. வலிமையான நல்ல விஷயங்கள் இருந்தாலும், தீவிரமான பாதகமான விஷயங்களும் இருக்கின்றன.

 

குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதுபோல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். ஏராளமான ராணுவத்தினர் பாதுகாப்புக்கு தேவைப்படுவார்கள். இது உண்மையில் சவாலான காரியம். நாடுமுழுவதும் 90 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள். ஒரேநேரத்தில் தேர்தல் நடந்தால், போக்குவரத்து வசதிகளை எல்லாம் செய்து கொடுப்பது சாத்தியமற்றது" எனத் தெரிவித்தார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரெய்ஷி இது குறித்து கூறுகையில், " ஒரேநேரத்தில் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடத்துவதில் பல நல்ல அம்சங்களும் இருக்கின்றன, பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவு ஏராளமாக மிச்சப்படும், நிர்வகிப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக தேர்தலில் பரவலாக நடக்கும் வகுப்புவாதம், சாதி, ஊழல் ஆகியவை குறையும். மிகப்பெரிய பிரச்சினை என்பது இது கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு.

மாநில அரசுகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு, தேசிய அரசியல் செயல்பட முடியாது. தேர்தலுக்குப் பின் 5 ஆண்டுகள் மக்கள் முன் முகத்தை காட்டாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த முறையின் மூலம் பொறுப்பு அதிகரிக்கும். மக்களுக்கு நன்றாக பணி செய்ய வாய்ப்புகள் ஏற்படும். இதற்கு தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ரீதியாக கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் " எனத் தெரிவித்தார்.

 

மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும், ’’இப்போதுள்ள நிலையில், ஒரேதேசம், ஒரே தேர்தல் சாத்தியமல்ல. அதற்கு அரசியலமைப்புச் சட்ட ரீதியாக திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்’’ என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x