Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM

மும்பையில் ஒரு ‘மெரீனா’ - போராடிய விவசாயிகளுக்கு உணவளித்த டப்பாவாலாக்கள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை குலுங்கச் செய்த பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உள்ளூர் மக்களுடன் சேர்ந்து டப்பாவாலாக்களும் உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்க தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து நேற்று பிற்பகல் விவசாயிகள் மும்பை வந்தடைந்தனர். அவர்கள் நேற்று இரவு முழுவதும் மும்பையில் பேரணியாக சென்றனர். மும்பையில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

இரவு முழுவதும் பேரணியாக வந்த விவசாயிகள், தெற்கு மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தை காலையில் வந்தடைந்தனர். அவர்களுக்கு மும்பை டப்பா வாலாக்கள் உணவும் தண்ணீரும் வழங்கினர். இதுபோலவே, மும்பை மக்கள், சமூக அமைப்பகளைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளுக்கு உணவு வழங்கினர்.

இதுகுறித்து மும்பை டப்பாவாலா சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் கூறியதாவது:

‘‘உலகிற்கே உணவு கொடுத்து ஆதரிப்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு உணவு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி. தாதர் முதல் கொலாபா வரை பணியாற்றி வரும் எங்கள் தோழர்கள் அந்தந்த பகுதியில் தங்கி இருக்கும் விவசாயிகளுக்கு உணவு கொடுத்து வருகிறார்கள். மக்கள் மீதம் வைத்திருக்கும் ரொட்டி உள்ளிட்ட உணவுகளை சேமித்து அதனை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். ஏற்கெனவே ஏழை மக்களுக்காக நாங்கள் செயல்படுத்தி வரும் ரொட்டி வங்கி மூலம் திரட்டப்படும் உணவை தற்போது விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்’’ எனக்கூறினார்.

இதுபோலவே மும்பை மக்களும், சமூக அமைப்புகள், நற்பணி மன்றங்கள் என பல தரப்பில் இருந்தும் விவசாயிகளுக்கு உணவு குவிந்து வருகிறது. மக்கள் தானாகவே முன் வந்து விவசாயிகளுக்கு உணவும், தண்ணீரும் வழங்கி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் விவசாயிகளுக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

டாப்பாவாலக்கள் யார்?

மும்பையில் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அவர்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று உரிய நேரத்தில் வழங்கி, மீண்டும் காலி டப்பாக்களை அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்கும் பணியைச் செய்து வருபவர்கள் 'டப்பாவாலாக்கள்' எனப்படுவர். பல ஆண்டுகளாக சரியான முறையில், மிக துல்லியமாக செய்து வரும் இவர்களது பணி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் டப்பாவாலாகளின் பணியை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமீபத்தில், உணவுகளை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் சமீபத்தில் ரொட்டி பேங்க் அமைப்பை மும்பை 'டப்பாவாலாக்கள்' தொடங்கினர். டப்பாவாலாக்கள்' தொடங்கிய ரொட்டி வங்கியில் பிரத்யேகமாக கால்சென்டர் ஒன்று செயல்படுகிறது. அதன்படி, வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் அதிகமாகி விட்டால், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், அதை 'டப்பாவாலாக்கள்' சென்று சேகரித்துக்கொள்வார்கள்.பின்னர் அந்த உணவு பசியோடு இருக்கும் வீடு இல்லாத மக்களுக்கும், சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x