Published : 23 Mar 2018 08:26 AM
Last Updated : 23 Mar 2018 08:26 AM

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்துள்ளார்: பிஎம்எல்ஏ தீர்ப்பாய அதிகாரி உத்தரவில் தகவல்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இயங்கும் தீர்ப்பாய அதிகாரி தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் நடந்தது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது. இதுகுறித்து பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் ஆய்வு நடத்தியது.

அதன் அடிப்படையில், பிஎம்எல்ஏ தீர்ப்பாய அதிகாரி துஷார் விஷா, 171 பக்க உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், “கார்த்தி சிதம்பரம், அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் ரூ.1.16 கோடி சொத்து முடக்கப்பட்டது. இந்த சொத்தை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் முடக்க முகாந்திரம் இல்லை என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி, அவரது நிறுவனம் பயனடைந்ததற்கான ஆதாரம் உள்ளதாகவே கருதுகிறோம். சட்டவிரோத பணப் பரிவர்த்தனையாக கருதப்படும் அந்த சொத்தை முடக்கலாம்” என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் 45 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x