Published : 06 Mar 2018 12:54 PM
Last Updated : 06 Mar 2018 12:54 PM

‘‘இதெல்லாம் சகஜம் தான்’’ - திரிபுராவில் லெனின் சிலை அகற்றம் பற்றி ஆளுநரின் சர்ச்சை கருத்து

திரிபுராவில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் ததகதா ராய், முந்தைய அரசின் செயல்பாடுகளை புதிய அரசு மாற்றுவது சகஜமான ஒன்று தான், இதற்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் அம்மாநிலத்தில், பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பாஜக ஆதரவாளர்கள் சிலர் அகற்றினர். இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் லெனின் சிலை அகற்றப்படும்போது அங்கு கூடியிருந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் திரிபுராவில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கன்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சிலை அகற்றம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவினரே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

இதனிடையே லெனில் சிலை அகற்றப்பட்டது குறித்து மாநில ஆளுநர் ததகதா ராய் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘முந்தைய அரசின் செயல்பாடுகளை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாற்றுவது வழக்கமான ஒன்று தான். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதற்கு முன்பும் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு பதவியேற்ற போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை அகற்றப்பட்டது’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே திரிபுராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தவிட்டதாக வந்த செய்தியையும் ஆளுநர் ததகதா ராய் மறுத்துள்ளார். அதுபோன்ற உத்தரவு எதையும் தாம் பிறப்பிக்கவில்லை எனவும், புதிதாக பதவியேற்றவுள்ள பாஜக அரசு முந்தைய அரசு மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

லெனின் சிலை அகற்றப்பட்டதை பாராட்டி பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோரும் புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x