Last Updated : 28 Mar, 2018 06:42 PM

 

Published : 28 Mar 2018 06:42 PM
Last Updated : 28 Mar 2018 06:42 PM

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம்: 2003-லிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தலுக்கான தகவல்களை அளிக்கிறோம்- அம்பலபடுத்துகிறார் கிறிஸ்டோபர் வைலி

 

இந்தியாவில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்காக தேர்தல் ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். தேர்தலில் அவர்களுக்கு ஏற்றார்போல் முடிவுகள் வர வேண்டி உழைத்திருக்கிறோம் என்று கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வைலி அம்பலப்படுத்தியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் தகவல்களைப் பெற்று அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டி நிறுவனம் பணியாற்றியது என்ற விவரத்தை வெளியே அம்பலப்படுத்தியவர் கிறிஸ்டோபர் வைலி. இவர் கேம்பிர்ட்ஜ்அனலிட்டிகா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் எந்தெந்த கட்சிகளுக்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தேர்தலில் பணியாற்றிக் கொடுத்து இருக்கிறது என்று முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வைலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்துள்ளார். மேலும், இதற்கு முன் பணியாற்றிய விவரங்களையும் இணைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்திய பத்திரிகையாளர்களிடமிருந்து ஏராளமான வேண்டுகோள்கள் எனக்கு வந்தன. அதனால், இதற்கு முன் இந்தியாவில் நாங்கள் பணியாற்றிய திட்டங்களை கொடுத்து இருக்கிறேன். இந்தியாவில் பணியாற்றிய இடங்களையும் அளித்திருக்கிறேன். இது ஒருவகையான நவீன காலனியாதிக்கம்.

இந்தியத் தேர்தலில் அரசியல்கட்சிகளுக்கு தங்களுக்கு விரும்பிய முடிவுகள் வர வேண்டும் என்பதற்காக நாங்கள் ஏராளமான இடங்களில் பணியாற்றி இருக்கிறோம். குறிப்பாக காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம்(தற்போது பாஜக கூட்டணி) உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் பணியாற்றி அவர்களுக்காக ஆய்வுகள் நடத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் வைலி பகிர்ந்துள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இதில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்சிஎல் குழுமத்தின் அலுவலகம் உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இந்திராபுரத்தில் இருக்கிறது.

மேலும், அகமதாபாத், பெங்களூரு, கட்டாக், கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொல்கத்தா, பாட்னா, புனே ஆகிய நகரங்களில் எங்கள் அலுவலகத்தின் கிளைகள் இருக்கின்றன.

7 லட்சம் கிராமங்கள், 600 மாவட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளைக் குறித்த புள்ளிவிவரங்கள், மக்கள் குறித்த புள்ளிவிவரங்கள், சாதிகளின் விவரங்கள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தொகுத்து இருக்கின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டில் இருந்து உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம், அசாம், ஜார்கண்ட் ஆகிய மாநில தேர்தலுக்கு பணியாற்றி இருக்கிறார்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு எஸ்சிஎல் மாநில அளவில் ஒவ்வொரு வீட்டிலும் சாதிவாரியாக வாக்காளர்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எஸ்சிஎல் நிறுவனம் ஏராளமான வேட்பாளர்களுக்காக பணியாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டதற்கு இனங்க தேர்தல் ஆய்வுப் பணியிலும் எஸ்சிஎல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதேபோன்று 2007-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் எஸ்சில் நிறுவனம் முழுநேரமாக அரசியல் ரீதியான ஆய்வுகளை குறிப்பிட்ட சில கட்சிகளின் சார்பில் நடத்தியள்ளது.

இந்த ஆய்வில் மாநில அளவில் எந்தெந்த தொகுதியில் சாதிவாரிய வாக்காளர்கள் அதிகமாக யார் இருக்கிறார்கள், மக்களின் விருப்பங்கள், தேவைகள், ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு ராஜஸ்தானிலும், டெல்லி, சட்டீஸ்கர் மாநிலத்தில் மக்களின் மனநிலை, குணாதியங்கள் குறித்து அறியும் ஆய்வுகளையும் இந்த எஸ்சிஎல் நிறுவனம் செய்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் கேரளா, மேற்குவங்கம், அசாம், பிஹார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிர ஜிகாதியிசத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது, எதிர்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த ஆய்வுகளை யார் நடத்தக்கூறியது என்பதை தெரிவிக்கவில்லை.

இவ்வாறு கிறிஸ்டோபர் வைலி வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x