Last Updated : 28 Mar, 2018 08:32 AM

 

Published : 28 Mar 2018 08:32 AM
Last Updated : 28 Mar 2018 08:32 AM

தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பிஹார் உட்பட 8 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற ராகுல் முடிவு

தமிழகம் உட்பட 8 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை மாற்ற அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.

மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டு ஆகும். ஆனால், கோஷ்டி மோதல் உட்பட பல் வேறு காரணங்களை சமாளிக்க பதவிக்காலம் முடிந்த பிறகும் அவர்களை அந்தப் பதவியில் தொடர வைப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என அக்கட்சித் தலைவராக பதவியேற்ற ராகுல் விரும்பினார். பதவி இழந்தவர்கள் ராகுலின் தலைவர் பதவியை எதிர்க்கவும் வாய்ப்பு இருப்பதாக மூத்த தலைவர்கள் எடுத்துக் கூறியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதனிடையே, குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அதன் மாநில தலைவர் பரத்சிங் சோலங்கி ராஜினாமா செய்துள்ளார். மக்களவை இடைத்தேர்தல் தோல்வியால் உபியில் ராஜ்பப்பரும் ஒடிசாவில் பிரகாஷ் ஹரிசந்தனும் கோவா தலைவர் சாந்தாராம் நாயக்கும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதுபோல, பிஹார் காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் சவுத்ரி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து விட்டார்.

தமிழகத்தில் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர். இவர்களை சமாளிக்கும் வகையில் ஒரு புதிய முகத்தை தலைவராக நியமிக்க ராகுல் விரும்புகிறார். இதுபோன்ற பல காரணங்களால் தெலங்கானா மற்றும் ஹரியாணா உட்பட 8 மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், டாக்டர்.செல்லக்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் ராகுலை சந்தித்து தலைவர் பதவியைப் பெற முயற்சிக்கின்றனர். சிறைக்கு செல்ல நேரிட்டதால் கார்த்தி சிதம்பரம் அந்த பட்டியலில் இருந்து தானாகவே விலகிவிட்டார். எனினும் திறமை வாய்ந்த ஒரு இளைஞரை நியமிக்க ராகுல் முடிவு செய்துவிட்டார். அது யார் என்பது ரகசியமாகவே உள்ளது” என்றனர்.

கடந்த செப்டம்பர் 2016-ல் தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். எனினும், அவர் மீது தொடர்ந்து குவியும் புகார்களும் ராகுலை நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது. அடுத்து இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்க விரும்பும் ராகுல், பாஜகவைப் போல ஒரு பெண்ணை தலைவராக்கவும் வாய்ப்பு உள்ளது. ஹரியாணா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வாருக்கு பதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷெல்ஜா குமாரியை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

குஜராத்துக்கு புதிய தலைவர்

இதற்கிடையே, மாநில தலைவர்கள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகத் தொடங்கிவிட்டது. இதில் முதலாவதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அமித் சவ்டா நேற்று நியமிக்கப்பட்டார். இவர் எம்எல்ஏவாக உள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x