Published : 18 Mar 2018 07:23 AM
Last Updated : 18 Mar 2018 07:23 AM

கடல் நீரை சுத்திகரித்து உற்பத்தி செய்ய சோதனை முயற்சி: 5 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் கிடைக்கும்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

கடல் நீரை சுத்திகரித்து பெறப்படும் குடிநீர், லிட்டர் 5 பைசா கட்டணத்தில் விரைவில் கிடைக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் பந்த்ராபன் கிராமத்தில் நதி மகோற்சவ விழா நேற்று தொடங்கியது. விழாவை தொடங்கி வைத்து நிதின் கட்கரி பேசியதாவது:

உலகின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல கிராமங்களும், நகரங்களும் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றம், நீர் வளங்கள் சுரண்டப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கான முன்னோடி திட்டம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவடைந்ததும், கடல் நீரை சுத்திகரித்து பெறப்படும் குடிநீர் லிட்டருக்கு 5 பைசா என்ற வீதத்தில் கிடைக்கும்.

தற்போது, இந்தியாவிலேயே பல மாநிலங்கள், நதி நீரை பங்கிடுவதில் சண்டையிட்டுக் கொள்கின்றன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அதேசமயத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து மூன்று நதிகள் மூலமாக தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x