Last Updated : 21 Mar, 2018 06:23 PM

 

Published : 21 Mar 2018 06:23 PM
Last Updated : 21 Mar 2018 06:23 PM

இந்தியத் தேர்தலில் தலையிட்டால் ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை பாயும்: கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை

 இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது. இதன் காரணமாகவே அதிபர் டிரம்ப் தனது பிரசார யுத்தியை மாற்றி அமைத்து மக்களைக் கவர்ந்தார் என்று தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.

இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து தரவுகளை தவறுதலாக கையாண்டு இந்திய தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் உதவியை வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக் தகவல்களை தவறுதலாகக் கையாண்டு, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் செயல்பட்டுள்ள விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நியாயமாக நடக்கும் இந்தியத் தேர்தல் முறையில் பேஸ்புக் மூலம் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தரவுகளையே நம்பி இருக்கிறது. நாள்தோறும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தில்லுமுல்லு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வந்தவாறு உள்ளன. இந்த நிறுவனம் எப்படி தகவல்களைத் திருடுகின்றன, உளவியல் ஆய்வுகள் மேற்கொள்கின்றன, தரவுகளை மாற்றி அமைக்கின்றன போன்ற விஷயங்கள் வெளிவருகின்றன.

இதுபோன்ற விஷயங்களை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மறுக்க முடியாது. இதற்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸை எத்தனை முறை சந்தித்துள்ளார், என்ன ஆலோசித்தார் என்பதை கூற முடியுமா?

ராகுல் காந்தியின் சமூக ஊடக பிரச்சாரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்கு என்ன? இணையதள பயன்பாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் செயல் மிகவும் வேதனைஅளிக்கும் விஷயமாகும்.

இந்தியர்களின் எந்தவிதமான தரவுத்திருட்டையும் மத்திய அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்பதை காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கையாக வைக்கிறோம். எத்தனை கோடி மக்களின் விவரங்களை கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது என்பதை மத்திய அரசு தெரிந்துகொள்ள விரும்புகிறது.

இதுபோன்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனத்தின உதவியால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இதற்கு முன் நடந்த குஜராத் தேர்தலிலும் இதைக் காணமுடிந்தது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே விஷயத்தை செயல்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

அமெரிக்க தேசிய வர்த்தக ஆணையத்துடனும், நீதித்துறையுடனும் தொடர்ந்து மத்திய அரசு தகவல்தொடர்பில் இருந்து வருகிறது. இந்தியர்களின் விவரங்களை எவ்வாறு திருட முயற்சிக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும், கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x