Published : 25 Sep 2014 13:27 pm

Updated : 25 Sep 2014 13:28 pm

 

Published : 25 Sep 2014 01:27 PM
Last Updated : 25 Sep 2014 01:28 PM

2016-ல் திமுக, அதிமுக அல்லாத அரசு: அன்புமணி எம்.பி. தகவல்

2016

`வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத அரசு அமையும்’ என பாமக இளைஞ ணித் தலைவர் அன்புமணி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி நல்ல தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது. அவர் நல்ல தீர்வு ஏற்படுத்துவார். ஐ.நா. சபை சார்பில் அமைக்கப்பட்ட பன்னாட்டு விசாரணைக் குழுவுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்காதது வருத்தமளிக்கிறது. அந்த குழுவுக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்துள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக பாமகவின் பசுமை தாயகம் சார்பில் கருத்துக்களை செல்ல 4 பேர் குழுவினர் சென்றுள்ளனர்.

ஐ.நா. பொது சபையில் பேச இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இதனை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை.

மின் கட்டண உயர்வு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. வீடுகளுக்கு 85 பைசாவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 2.72-ம் உயர்த்தப்படவுள்ளது. இதனை பாமக கண்டிக்கிறது. தமிழக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும்.

ஆனால், மின்வெட்டு தொடர்கிறது. `இனிமேல் மின்வெட்டு இருக்காது’ என 10 முறை தமிழக முதல்வர் கூறிவிட்டார். மின்வெட்டு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2011 உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்ததும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் பற்றாக்குறை பிரச்சினைக்கு காரணம் தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்தின் திறமையற்ற செயல்பாடு தான். இதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

இடைத்தேர்தலே கூடாது என்பது தான் பாமகவின் நிலை. உள்ளாட்சி இடைத்தேர்தலில அதிமுகவினர் செய்த அராஜகத்துக்கு அளவே இல்லை. தமிழக தேர்தல் ஆணையம் மாநில அரசின் அங்கமாகவே செயல்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஆணையத்தை கலைத்துவிடலாம். தமிழகத்தில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது.

2016 தேர்தல்

எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் மீது கோபத்தில், வெறுப்பில் இருக்கிறார்கள். வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். பணம், அதிகாரபலம் மூலம் மக்களை வாங்க முடியாது. மக்கள் ஒருமுறை தான் ஏமாறுவார்கள். இனி ஏமாறமாட்டார்கள்.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்துக்கு நல்ல முடிவு ஏற்படும். 47 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சிக்கு முடிவு வரும். 2016 தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத அரசு தமிழகத்தில் அமையும்.

திமுக தலைவர் கருணாநிதியை, ராமதாஸ் சந்தித்தது, எனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தான். அதில் அரசியல் எதுவும் இல்லை.

தாமிரவருணியில் வீணாகும் தண்ணீர்

ஒருபுறம் கடுமையான வறட்சி நிலவும் வேளையில் தாமிரவருணியில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனைத் தடுக்க 47 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. கோவில்பட்டி 2-வது பைப்லைன் திட்டம் பாதியில் நிற்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதற்கான முயற்சிகளை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொள்ள வேண்டும்.

ராக்கெட் தளம்

நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவுள்ளேன். பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்துவேன் என்றார் அன்புமணி.

அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அன்புமணி எம்.பி. தகவல்பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிதிமுக அதிமுக இல்லாத அரசு2016 தேர்தல்

You May Like

More From This Category

More From this Author