Last Updated : 09 Mar, 2018 09:04 AM

 

Published : 09 Mar 2018 09:04 AM
Last Updated : 09 Mar 2018 09:04 AM

எம்.டெக். படிப்பில் ஏற்படும் காலியிடங்கள்: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி

ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ் போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.டெக். படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் விட்டுச் செல்லும் நிலை உள்ளது. படிக்கும்போதே இவர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளர் பணி கிடைத்து விடுவதே இதற்கு காரணம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கான திறனாய்வுத் தேர்வு (கேட்) ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் செப்டம்பரில் வெளியாகின்றன. இதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொறியாளர்களாக பணியில் சேருகின்றனர்.

கேட் தேர்வில் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ் போன்ற தேசிய கல்வி நிறுவன மாணவர்கள் அதிகம் தேர்வாகின்றனர். இவர்கள் கேட் தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே இதே கல்வி நிறுவனங்களில் எம்.டெக் சேருகின்றனர். இவர்களில் பலர் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று பொறியாளராக பணியில் சேர்ந்தவுடன் தங்கள் படிப்பை பாதியில் விடுகின்றனர். இவர்களால் ஏற்படும் எம்டெக் காலியிடங்களை பிறகு நிரப்ப முடியாமல் அந்த இடங்கள் காலியாகின்றன.

இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் உயர்கல்வி நிறுவனங்கள் கோரி வந்தன. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் மத்திய கனரக தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் வருவதால் இத்துறையிடம் பேசி, புதிய நடைமுறை வகுப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஐடி பேராசிரியர் வட்டாரத்தில் கூறும்போது, “ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ் போன்ற நிறுவனங்கள் எம்டெக் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக தங்கள் பணி நியமனத்தை முடித்தால் எம்டெக் இடங்கள் வீணாவதை தடுக்கலாம்” என்றார்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வகுக்கவுள்ள புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x