Published : 07 Mar 2018 06:18 PM
Last Updated : 07 Mar 2018 06:18 PM

கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதிக்கு கத்திக்குத்து: அலுவலகத்தில் புகுந்து தாக்குதல்

கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை, அவரது அலுவலகத்தில் புகுந்து ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் லோக் ஆயுக்தா அலுவகத்திற்கு புகார் கொடுப்பதற்காக தேஜஸ் சர்மா என்பவர் வந்தார். தான் ஒரு வழக்கறிஞர் என பதிவேட்டில் எழுதி கையெழுத்திட்டு உள்ளே சென்ற சர்மா, புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், மறைத்து வைத்திருந்த கத்தியால், நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை மாறி மாறி குத்தினார். அங்கிருந்தவர்கள் தேஜஸ் சர்மாவை பிடித்தனர். பின்னர் அவர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த தகவல் வெளியானதும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட பிற அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். விஸ்வநாத் ஷெட்டியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை விவரம் தொடர்பாக மருத்துவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘லோக் ஆயுக்தா நீதிபதியை கொல்ல வேண்டும் என்ற எண்ணித்தில் அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்படும்’’ எனக் கூறினார்.

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாக, எதிர்கட்சி் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x