Published : 16 May 2019 10:11 AM
Last Updated : 16 May 2019 10:11 AM

‘‘பாஜகவுக்கு பரிசு வழங்குவதா?’’ - தேர்தல் ஆணைய உத்தரவுக்கு மம்தா கடும் கண்டனம்

மேற்குவங்கத்தில் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் பிறபித்துள்ள உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது, பாஜகவுக்கு வழங்கும் பரிசு என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள்.

 உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஷ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக இன்று 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கருத்து தெரிவிக்கையில் ‘‘இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

வன்முறையை தூண்டிய பாஜக மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த கட்சிக்கு பரிசு வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்ததற்காக பாஜகவினருக்கு தேர்தல் ஆணையம் வழங்கு பரிசு இது. இது தர்மத்துக்கு, சட்டத்துக்கு, ஜனநாயகத்துக்கு, அரசியல் செயல்பாட்டுக்கு எதிரானது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x