Last Updated : 27 May, 2019 02:24 PM

 

Published : 27 May 2019 02:24 PM
Last Updated : 27 May 2019 02:24 PM

3-வது குழந்தைக்கு வாக்குரிமை இல்லையா? மோடியும் வாக்குரிமையை இழப்பார்; பாபா ராம்தேவ் கருத்துக்கு ஒவைசி எம்.பி. பதிலடி

நாட்டில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.

ஹரித்துவாரில் நேற்று யோகா குரு பாபா ராம்தேவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் மக்கள் தொகையை 150 கோடிக்கும் மேல் அனுமதிக்க முடியாது. அதைச் சமாளிக்க இந்தியா தயாராக இல்லை. உடனடியாக சட்டம் கொண்டு வந்து, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு அல்லது பெற்றோருக்கு வாக்குரிமையைப் பறிக்க வேண்டும். அந்தக் குழந்தை தேர்தலில் போட்டியிடவும், அரசின் சலுகைகள், சேவைகளைப் பெறவும் தடை விதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலடிகொடுத்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " மோசமான சட்டவிரோதமான விஷயங்களைச் சொல்வதை தடை செய்ய எந்த சட்டமும் இல்லை. அப்படி இருக்கும்போது, ராம்தேவ் கூறும் யோசனைகள் எல்லாம் அதிகமான கவனத்தைப் பெறப்போகிறதா?

பாபா ராம்தேவ் தனது வயிற்றின் மூலம், தனது காலின் மூலம் எளிதாக யோகா செய்யலாம். ஆனால், சட்டம் இயற்றுவது அப்படியல்ல. மூன்றாவது குழந்தை வாக்குரிமை இழக்கும் என்றால், நரேந்திர மோடியும்தான் வாக்குரிமையை இழப்பார். ஏனென்றால் அவருடைய குடும்பத்தில் அவர் மூன்றாவது குழந்தைதான்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் பிரதமர் மோடி பேசுகையில், "நாட்டில் சிறுபான்மையினர் அச்சத்துடன் இருக்கிறார்கள். அந்த அச்சத்தை நீக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்தும் ஒவைசி நிருபர்களுக்கு ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " சிறுபான்மையினர்களுக்கு உதவுவது, சேவை செய்வது குறித்து பிரதமர் மோடி உதட்டளவில் மட்டுமே பேசுகிறார். அவரின் பேச்சு போலித்தனத்தையும், முரண்பாடுகளையும் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்டப்படி பிரதமர் மோடி பதவி ஏற்கும் போது, மனிதர்களின் வாழ்வதற்கான உரிமை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிருகங்களுக்கான உரிமை பற்றி அல்ல. நிச்சயமாக இந்த அச்சம் சிறுபான்மையினரிடம் இருந்து அகலும். ஆனால், பாஜக அடிப்படை உரிமைகளை ஊக்கப்படுத்துவது இல்லை.

பசுக்களின் பெயரால் முஸ்லிம்களைத் தாக்கும், கொலை செய்யும் கும்பல்களைத் தடுத்து நிறுத்தினாலே சிறுபான்மையினர் இடையே இருக்கும் அச்சம் அகன்றுவிடும். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியின் மூலம் பசுப் பாதுகாவலர்கள் கரங்கள் வலுப்படும், அவர்களை யாராலும் தடுக்க முடியாது"  எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x