Published : 20 May 2019 06:19 PM
Last Updated : 20 May 2019 06:19 PM

பரம்பரைக் கட்சிகள், சாதிக்கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவாக அமையும்: அருண் ஜேட்லி உறுதி

பரம்பரைக் கட்சிகள், சாதிக்கட்சிகளுக்கு 2019 தேர்தல் பின்னடைவாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்தது. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே கருத்துக் கணிப்பு வெளியானது. அதேபோல தேர்தல் முடிந்த பிறகும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ''தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தனிப்பட்ட நபர்கள் உடனான உரையாடலை அடிப்படையாகக் கொண்டவை. இதில் இவிஎம் இயந்திரங்களுக்கு எந்த வேலையும் இல்லை.

கருத்துக் கணிப்புகளின் முடிவும் தேர்தல் இறுதி முடிவுகளும் ஒரே மாதிரியாக இருந்தால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் இவிஎம் இயந்திரங்கள் மீதான அடிப்படையே இல்லாத வாதமும் முடிவுக்கு வரும்.

ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்ட மக்கள் ஒரே திசையில் வாக்களிக்கும்போது ஓர் அலை உருவாகும். பரம்பரைக் கட்சிகள், சாதிக்கட்சிகள், தடை செய்யப்பட்ட கட்சிகளுக்கு 2014 தேர்தல் முடிவுகள் மாபெரும் பின்னடைவாக அமைந்தன. இது இன்னும் தெளிவாக, உறுதியாக 2019-லும் எதிரொலிக்கும்'' என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ''தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இவிஎம் இயந்திரத்தில் மோசடி செய்யவோ அவற்றை மாற்றவோ மேற்கொள்ளப்படும் திட்டம்'' என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x