Published : 21 May 2019 10:46 AM
Last Updated : 21 May 2019 10:46 AM

தேர்தல் முடிந்தவுடன் மாயம்: பாஜக ஆதரவு நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்

பிரதமர் மோடியின் அரசியல்ரீதியான பேச்சுகளையும், பிரச்சாரங்களையும் ஒளிபரப்புவதற்கென்று தொடங்கப்பட்ட  , பாஜக ஆதரவு சேனலான நமோ டிவி மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தனது ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டது.

மக்களவைத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சேனல் கடந்த 17-ம்தேதியோடு ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டது.

கடந்த மார்ச் 26-ம் தேதியில் இருந்து எந்தவிதமான கட்டணமின்றி இந்த சேனல் டாடா ஸ்கை, வீடியோகான், டிஷ் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பானது. ஆனால், பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்ட இயந்திரம் என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சித்தன.

தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் சார்பில், நமோ டிவி தொடர்பாக பல்வேறு புகார்கள் அளித்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் பாஜகவுக்கு எதிராகவோ, பிரதமர் மோடிக்கு எதிராகவோ தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

டாடா ஸ்கை நிறுவனம் தொடக்கத்தில் நமோ டிவியை இந்தி செய்தி சேனல் என்று ட்வீட் செய்து பின்னர் அந்த ட்வீட்டை நீக்கவிட்டது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், " நமோ டிவி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்தபின் இனிமேலும் அந்த சேனல் தேவையில்லை. அதனால் 17-ம் தேதியோடு அந்த சேனலின் ஒளிபரப்பை நிறுத்திவிட்டோம் " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கூறுகையில், " நமோ சேனலுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் தேவையில்லை ஏனென்றால், நமோ சேனல் ஒரு விளம்பரச் சேனல் மட்டும்தான் " எனத் தெரிவித்தது.

ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நமோ சேனல் ஒளிபரப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று அதன்பின் ஒளிபரப்ப வேண்டும். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் ஒப்புதல் பெறாமல் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சிகளும் உடனடியாக நீக்கப்படும்  என்று தெரிவித்திருந்தது.

பாஜகவின் நமோ சேனல், இஸ்ரோவின் என்எஸ்எஸ்-6 வகை செயற்கைக்கோளில் இருந்து தனது ஒளிபரப்பைச் செய்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமரின் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்ட சேனல் எவ்வாறு அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோளின் அப்லிங், டவுன்லிங்க் சிக்னல்களை பயன்படுத்த முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலை கட்டுப்படுத்தினார்கள். நமோ டி, மோடியின் ஆர்மி, இப்போது  கேதார்நாத் நாடகம். தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டது வேறு ஏதும் சொல்வதிற்கில்லை " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x