Published : 30 May 2019 11:39 AM
Last Updated : 30 May 2019 11:39 AM

மோடி பிரதமராக வேண்டுமென்பது கடவுளின் திட்டம்; பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்கும் மம்தா சர்வாதிகாரி: சிவசேனா

மோடி பிரதமராக வேண்டுமென்பது கடவுளின் திட்டம் என நெகிழ்ந்து கட்டுரை வரைந்திருக்கிறது சிவசேனாவின் சாம்னா நாளிதழ் தலையங்கம்.

அதேவேளையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என அழைப்பைப் புறக்கணித்திருக்கும் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சிவசேனா கண்டித்திருக்கிறது.

முன்னதாக மம்தா நேற்று மாலை ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50 பாஹக தொண்டர்களின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பட்டுள்ளதை அரசியல் ஆதாயம் எனக் கூறி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பதாக மம்தா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான சாம்னாவில் இது குறித்து ஐஸ்வர்ய யோஜனா என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

நரேந்திரமோடி பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனக் கூறப்பட்டது. எதிர்க்கட்சிகள் இப்படியொரு சந்தேகத்தை எழுப்பினர். அதிலும் மம்தாதான் முதன்முதலில் இத்தகைய சந்தேகத்தைக் கிளப்பினார். பிரதமரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடுவதாக கூக்குரலிட்டார். ஆனால், மக்கள் ஜனநாயக முறைப்படி பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இப்போது மம்தா பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார். தேர்தலின்போது வன்முறை நடந்தது உண்மையே. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததையெல்லாம் ஒரு காரணமாகக் கூறி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியாகாது. அவர்களும் இந்தியர்கள்தானே. அவர்கள் ஒன்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவே. பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது அல்லவா?

உண்மையில் மம்தாவும், திரிணமூல் கட்சியும்தான் ஜனநாயகமற்று இருக்கிறது. தேர்தலின்போது ஒடிசாவில் ஒரு புயல் தாக்கியது. பிரதமர் எல்லா உதவிகளையும் செய்தார். ஆனால் அங்கு பாஜக மோசமாக தோற்றது.

ஜெகன்மோகன் ரெட்டி ஒரு வெற்றி வீரர். அவர் பிரதமரை சந்தித்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். பிரதமரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், ஆந்திராவில் பாஜக மோசமாக தோற்றது.

ஆனால், வெற்றிக்குப் பின்னர்கூட பிரதமர் எதிராளிகளைப் பற்றி எதுவுமே பேசவில்லை. புதிய ஆட்சி கட்டுப்பாடுகளுடன் மனிதத்தைப் பேணும். மோடி அதனை அவரது வேலை கலாச்சாரம் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவியேற்பு விழாவுக்கு அழைக்காததன் மூலம் மோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளார்.

இந்த தேசத்தின் பிரதமராக ஆட்சி செய்ய வேண்டுமென்பது கடவுளின் திட்டம். இந்த தேசத்தின் முன் நிறைய கேள்விகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிற்கு எல்லாம் பிரதமரின் மலையளவு துணிவே பதில் சொல்ல இயலும். இதுதான் இந்த பதவியேற்பு விழாவின் முக்கியத்துவமும் கூட. மோடி இந்த தேசத்தின் பாதுகாவலராக இருக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 48 மக்களவை தொகுதிகளில் 41 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x