Last Updated : 22 May, 2019 12:00 AM

 

Published : 22 May 2019 12:00 AM
Last Updated : 22 May 2019 12:00 AM

காங்கிரஸ் - மஜத கூட்டணி முறிவதற்கு சித்தராமையாவே காரணம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ரோஷன் பெய்க் பரபரப்பு குற்றச்சாட்டு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி படுதோல்வி அடையும் என தெரியவந்துள்ளது. இதனால் காங்கிரஸ், மஜத தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரோஷன் பெய்க் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி தோல்வி அடைந்தால் அதற்கு முழு காரணம் சித்தராமையாதான். அவரது சுயநலமும், அகங்காரமும் காங்கிரஸை அதள பாதாளத்துக்கு கொண்டுசென்று விட்டது. காங்கிரஸ் - மஜத கூட்டணி உடைவதற்கும் சித்தராமையா தான் காரணம்.

கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் மஜதவை தாமாக போய் ஆதரித்தது. காங்கிரஸ் தலைவர்கள் குமாரசாமியின் வீட்டுக்கு போய் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். அதனால் அவர் கூட்டணியை ஏற்றுக்கொண்டு முதல்வரானார். ஆனால் சித்தராமையா, “நான் தான் முதல்வர்'' என அகங்காரத்தோடு சொல்லிக்கொண்டு வருகிறார். இந்த கூட்டணிக்குள் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் சித்தராமையாவும், அவரது ஆதரவாளர்களுமே காரணம்.

கர்நாடக காங்கிரஸ் மேலிடத் தலைவர் கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி. அவருக்கு ஒன்றுமே தெரியாது. மாநில தலைவராக இருக்கும் தினேஷ் குண்டுராவ் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார். இவர்களை நம்பியிருக்கும் எனது தலைவர் ராகுல் காந்திக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸில் சிறுபான்மையினருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் ஒரு கிறிஸ்தவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை. ஒரே ஒரு முஸ்லிமுக்கு தான் சீட் கொடுத்தார்கள். கர்நாடக அமைச்சரவையிலும் ஒரே ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு அந்த இடம் கூட கொடுக்கவில்லை.

முஸ்லிம்களை காங்கிரஸ் நன்றாக பயன்படுத்திக்கொண்டது. ஆனால், அந்த சமூகத்துக்கு எதையும் செய்யாமல் ஏமாற்றிவிட்டது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அதனை ஆதரிக்கும் மனநிலைக்கு முஸ்லிம்கள் வர வேண்டும். பாஜகவுடன் சமாதானப் போக்கை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க தயாராக வேண்டும். இவ்வாறு ரோஷன் பெய்க் தெரிவித்தார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதனிடையே, கட்சி விதிமுறைகளை மீறி பேசியதாக ரோஷன் பெய்க்குக்கு கர்நாடக காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x