Published : 10 May 2019 12:00 AM
Last Updated : 10 May 2019 12:00 AM

பொறுப்பில்லாத பிரதமர் நரேந்திர மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

நாடு சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளில் பிரதமர்களாக பதவி வகித்தவர்களில் துளிகூட பொறுப்பில்லாத பிரதமர் யார் எனில் அவர் நரேந்திர மோடிதான் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில்தான் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டனர்.மாநிலங்களிடையே பிரச்சினைகள், இரு நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் தலை தூக்கின. கடந்த 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு பொறுப்பற்ற பிரதமரை நான் கண்டதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை அவர் சந்திக்கவில்லை. நாட்டிலேயே முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 4 நீதிபதிகள் நாட்டின் ஜனநாயகம் மிகவும் இக்கட்டான சூழலை நோக்கி செல்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

நாட்டிலேயே முதன்முறையாக, பாதுகாப்பு அமைச்சகத்தில் ரஃபேல் குறித்த முக்கிய ஆவணங்கள் மாயமாகின. மோடி ஆட்சியில்தான் மக்களுக்கு முதன்முறையாக வங்கிகள் மீது நம்பிக்கை போனது. ஏடிஎம் இயந்திரங்களை இவர் திருஷ்டி பொம்மைகளாக மாற்றினார். பண மதிப்பிழப்பு திட்டத்தை ஊரே சிரிக்கும் வகையில் அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் பெரும் ஊழல்களுக்கும் இவர் வித்திட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வரியை சரிவர அமல்படுத்தாமல் தோல்வி அடைந்தவர் மோடி. இவரது ஆட்சிக்காலத்தில்தான் ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்தது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x