Last Updated : 07 Apr, 2014 12:00 AM

 

Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

மக்களவைத் தேர்தலுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு: அசாம், திரிபுராவில் 6 தொகுதிகளில் நடக்கிறது

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாமின் 5 தொகுதிகளிலும் திரிபுராவின் ஒரு தொகுதியிலும் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 16-வது மக்கள வைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது.

களத்தில் 51 வேட்பாளர்கள்

அசாமில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் தேஜ்புர், கோலியாபுர், ஜோராஹாட், திப்ருகர், லக்கிம்புர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 64,41,634 பேர் தங்களது வாக்கு களை பதிவு செய்ய உள்ளனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, அசாம் கண பரிஷத் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக ஒவ் வொரு தேர்தலையும் புறக்கணிக் கக் கோரும் உல்பா தீவிரவாத அமைப்பு முதல்முறையாக இந்தமுறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

முதல்வர் மகன் தொகுதியில் கடும் போட்டி

கோலியாபுர் தொகுதியின் வேட்பாளரும் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய்க்கும் அசாம் கண பரிஷத் வேட்பாளர் அருண் சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

லக்கிம்புர் தொகுதியில் பாரதிய ஜனதாவின் அசாம் மாநிலத் தலைவர் சர்வானந்தா சோன்வால் போட்டியிடுகிறார். முன்னாள் எம்பியான இவர் அசாம் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராணி நாரா களத்தில் உள்ளார்.

அசாம் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராணி நாரா காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்பியாக இருந்தவர். இப்போது நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

தில்பர்க் தொகுதியில் வட கிழக்கு மாநில விவகாரங்களுக் கான மத்திய இணையமைச்சர் பவன்சிங் கடோருக்கும் பாஜக வேட்பாளர் ராமேஸ்வர் தெலிக் கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

திரிபுராவில் ஒரு தொகுதியில் தேர்தல்

திரிபுராவில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திரிபுரா மேற்கு தொகுதிக்கு மட்டும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாவும் காங்கிரஸ் வேட்பாளர் அருணோதய் சஹாவும் போட்டி யில் உள்ளனர். 12 லட்சம் வேட்பா ளர்கள் வாக்களிக்க இருக்கும் இந்தத் தொகுதியில் 13 வேட்பாளர் கள் களத்தில் உள்ளனர்.

அசாமில் மீதம் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

8588 வாக்குச் சாவடிகள்

வடகிழக்குப் பிராந்தியத்தில் முதல்முறையாக வாக்குச் சாவடிகளில் சிகரெட், பீடி புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 8588 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உல்பா தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லேகாதுடியா வாக்குச்சாவடிக்கு பலத்த பாதுகாப்புடன் தீப்ரு நதியில் படகில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் தேர்தல் அலுவலர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

முதல்முறையாக 11 மணி நேர வாக்குப்பதிவு

வரும் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர். மேலும் கோடை காலம் என்பதால் மாலை நேரத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும் என்பதால் இந்த மக்களவைத் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்குச் சாவடிகளில் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி தலைமை அதிகாரி மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். எனினும் அவர் செல்போனில் பேச அனுமதி இல்லை. பதிவான வாக்கு விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் உயரதிகாரிக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x