Last Updated : 19 Apr, 2019 05:20 PM

 

Published : 19 Apr 2019 05:20 PM
Last Updated : 19 Apr 2019 05:20 PM

மூன்றாம் கட்ட வேட்பாளர்களில் 570 பேருக்கு கிரிமினல் பின்னணி: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

நடைபெற உள்ள மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளில் 570 பேர் கிரிமினல் வழக்குகளில சிக்கியிருப்பவர்கள் என்று ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இன்று ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (அசோஸியேஷன் ஆப் டெமாக்ரெடிக் ரிஃபார்ம்ஸ் - ஏடிஆர்) என்ற இந்திய தேர்தல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்துவரும் அமைப்பு இன்று ஒரு புள்ளிவிவர ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்களின் சுயநிர்ணய உரிமை வாக்குமூலங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் ஏடிஆர் தனது ஆய்வை வெளியிட்டது.

அதில் கூறப்பட்ட விவரம் வருமாறு:

90 காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 பேரும், 97 பாஜக வேட்பாளர்களில் 38 பேரும் கிரிமினல் வழக்குகள் முடியாதநிலையில் உள்ளனர்.  மிகக் குறைந்த அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கொலைக்குற்றம் உள்ளிட்ட இதர குற்றங்கள்

மேலே குறிப்பிடப்பட்டவர்களில் மொத்தமாக பார்த்தால் பதினான்கு வேட்பாளர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் ஆவர். 13 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாக்குதலில் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுதல்,

கணவனாகவோ அல்லது கணவனுக்கு உடந்தையாகவோ ஒருபெண்ணை வன்கொடுமை செய்தது போன்ற வகையில் 26 பேர் மீது கிரிமினல் குற்றங்கள் உள்ளன.

இதுஒரு பக்கம் இருக்க, அவதூறு வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபட்டதாக 26 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

சிவப்பு எச்சரிக்கை

தொகுதிகள் குறித்த ஆய்வறிக்கையையும் ஏடிஆர் வெளியிட்டுள்ளது. ஒரு தொகுதியில் நிற்கும் மூன்று அல்லது அதற்கும்மேற்பட்ட வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அத் தொகுதி சிவப்பு எச்சரிக்கை தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 115 மக்களவைத் தொகுதிகளில் 63 சிவப்பு எச்சரிக்கை தொகுதிகளாகும்.

குற்றவியல் வழக்குகள் தவிர, வேட்பாளர்களின் வாக்குமூலங்களில் நிதி மற்றும் கல்வி பின்னணி குறித்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஏடிஆர் குறிப்பிடும் ஆய்வின்படி மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளர்களில் 392 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிவித்துள்ளது.

சொத்து மதிப்பு

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் குமர் தேவேந்திர சிங் யாதவ் ரூ.204 கோடி சொத்து வைத்துள்ளதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக கோடிகளில் சொத்துள்ளவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் போன்ஸ்லே ஸ்ரீமந்த் சத்திரபதி. இவரிடம் உள்ள தற்போதைய சொத்தின் மதிப்பு ரூ.199 கோடி.

இதன்மூலம் போட்டியிடும்  1,612  வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.95 கோடி. என்று ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் உள்ள சொத்துமதிப்பு, தேர்தல் விதிமுறைகளின்படி பார்த்தால் ரூ.1 கோடிக்கும் அதிகமாகவே உள்ளது.

நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக செல்லவேண்டியவர்கள் குற்றப் பின்னணியோடும் பொய்க்கணக்கு சொத்துமதிப்புகளோடும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதுதானா என்றும் இவ்வறிக்கை கேள்வியெழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x