Last Updated : 13 Apr, 2019 09:41 PM

 

Published : 13 Apr 2019 09:41 PM
Last Updated : 13 Apr 2019 09:41 PM

அப்துல் கலாமுக்கு பாஜக நினைவிடம் எழுப்பியது; காங்கிரஸ் குடும்ப உறுப்பினர்களுக்குதான் எழுப்பியது: பிரதமர் மோடி கடும் தாக்கு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு பாஜக நினைவிடம் எழுப்பியது, ஆனால், காங்கிரஸ் கட்சியோ முன்னாள் தலைவர்களுக்கு எழுப்பாமல் குடும்ப உறுப்பினர்களுக்காக கட்டியது என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் பாஜக சார்பில்  நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் என்பது யார் எம்.பியாக வருகிறார்கள், பிரதமராக வருகிறார்கள், அமைச்சர்களாக வருகிறார்கள் என்பதை முடிவு செய்வதற்கானதல்ல, புதிய இந்தியா எப்படி இருக்கப் போகிறது, என்ன உத்வேகத்தில் வரப்போகிறது என்பதில்தான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வாரிசு அரசியலில் உத்வேகத்தை பெற்றுள்ளது. ஆனால், நாங்கள் தேசியவாதத்தால் உத்வேகத்தை பெற்றுள்ளோம். தங்கள் குடும்பத்தில் கடைசி உறுப்பினர்கள்வரை அதிகாரத்தை பெற வேண்டும் என்று குறிக்கோளோடு அவர்கள் இருக்கிறார்கள், ஆனால், நாங்கள், சமூகத்தில் கடைசி மனிதர்வரை அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக உழைக்கிறோம்.

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குடும்பத்தை, வம்சத்தை வளர்ப்பதில்தான் நோக்கம் இருக்கிறது, ஆனால், எங்களுக்கு சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரை கைதூக்கிவிடுவதில்தான் நோக்கம். அவர்களின் நோக்கம், ஊழல், நேர்மையின்மை. எங்களின் பார்வை, நோக்கம், வெளிப்படைத்தன்மை, நேர்மையை அதிகப்படுத்துவது.

இந்த வாரிசு அரசியல் ஈடுபட்டுள்ள கட்சிகள்  தங்கள் சொந்த கட்சித் தலைவர்களையே புறம்தள்ளுகிறது. ஆனால், எங்களின் சமானியர்களுக்கான நோக்கத்தால், தேநீர் விற்பனையாளர்கூட பிரதமராக முடியும்.

எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்ததால், வனப்பகுதியில் மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கும், மரபுசார்ந்த மரங்கள், செடிகளை பாதுகாத்தவர்களையும், எளிமையாக இருந்து சேவை செய்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை அளித்தோம்.

பெருமை மிகு குடியரசு தலைவர் மாளிகைக்கு கிழிந்த செருப்புகளுடன் முதியவர்கள் வந்து பத்ம விருதுகளைப் பெற வைத்துள்ளோம். இதுதான் என்னைப் பொருத்தவரை உண்மையான இந்தியா.

இந்த வேற்றுமைதான் எங்கள் ஆட்சியில் நடந்துள்ளது. ஆனால், சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோல் நடக்காதது வேதனையளிக்கிறது. 20-ம் நூற்றாண்டு காங்கிரஸ் கட்சிக்கு அளித்த வாய்ப்பை அது ஒரு குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தி வாய்ப்பை இழந்துவிட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு நாங்கள் நினைவிடம் அமைத்தோம். இதுபோன்ற நினைவிடங்களை முன்னாள் குடியரசுதலைவர் ராதாகிருஷ்ணனுக்கு ஏன் அமைக்கவில்லை, மற்ற தலைவர்களுக்கு ஏன் அமைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் நினைவிடம் அமைத்துக்கொண்டது. 21-ம் நூற்றாண்டு காங்கிரஸ் கட்சியை பல தவறுகளை செய்யத் தள்ளியது.

நாங்கள் துல்லியத் தாக்குதல் நடத்தியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டார்கள். நம்முடைய வீரர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை நம்புகிறீர்களா இல்லையா. அந்த துணிச்சலுக்கு ஆதாரங்கள் தேவையா. தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள் சென்று அவர்களை அழித்துவிட்டு நமது வீரர்கள் வந்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளோ ஆதாரங்கள் கேட்கிறார்கள். ஆதாரம் கேட்பவர்கள் வெட்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் வெட்கப்பட்டார்களா.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் பெயரைக் கூறினாலே அங்குள்ள அரசு சிறையில் தள்ளுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்திருக்கும் தொகுதியின் வேட்பாளர் கடந்த 15 நாட்களாக சிறையில் இருந்து நேற்றுதான் ஜாமீனில் வந்தார். அங்கு நான் சென்று நிலையை கேட்டறிந்தேன்.

காங்கிரஸ் கலாச்சாரம் நாட்டின் பாரம்பரியத்தை மட்டும் பலவீனமாக்காது, நம்முடைய பாதுகாப்பையும் பலவீனமாக்கும். பொருளாதாரத்தையும் அழித்துவிடும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x