Published : 15 Apr 2019 11:50 AM
Last Updated : 15 Apr 2019 11:50 AM

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு இடமான கறுப்பு பெட்டி:  விசாரணை கோரும் காங்கிரஸ்

பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு இடமான கறுப்பு நிற பெட்டியை, பாதுகாப்பு வீரர்கள் வாகனத்தில் ஏற்றியது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, விசாரணை நடத்தக் கோரியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்தரதுர்கா பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி சென்றார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டரில் இருந்து சந்தேகத்துக்கு உரிய வகையில் கறுப்புநிற இரும்புப் பெட்டியை இறக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் அதை மற்றொரு வாகனத்தில் ஏற்றினர். இதை வீடியோ காட்சியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு விசாரணை கோரியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு உரிய வகையில் ஒரு பெட்டியை இறக்கி, அதை வேறு ஒருவாகனத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றினார்கள். இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை பிரதமர் மோடி தலையிட்டு விளக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை கேட்பதற்கும், அந்த வாகனம் யாருடையது, அந்த பெட்டி திடீரென மாயமானது குறித்தும் சட்டப்படி கேட்கிறோம். இந்த விஷயத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே சட்டப்படி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி தன்னுடைய அரசு என்ன செய்தது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து விளக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் 2-வது கட்ட வாக்குப்பதிவில் இருக்கிறோம், கடந்த 2014-ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி எழுப்பினால், அது குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி அச்சப்படுகிறார். பிரதமர் மோடியின் அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மக்களிடம் தான் வலிமையான பிரதமர் என்று தோற்றத்தை ஏற்படுத்தி, உணர்வுகளுடன் விளையாடி, மோடி மக்களை முட்டாளாக்குகிறார். நாட்டில் தலித் மக்களின் நிலைப்பாடு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினால் மோடி மவுனம் காக்கிறார்

இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x