Published : 28 Apr 2019 04:50 PM
Last Updated : 28 Apr 2019 04:50 PM

இந்தியாவில் மருந்துகள் கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு

இந்தியாவில் மருந்துகள் கள்ளத்தனமாக தயாரிக்கப்படுகிறது என்று அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்க இந்திய அரசு அதனை கடுமையாக மறுத்துள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதார அமைச்சகம், அமெரிக்காவின் குற்றச்சாட்டு விலை மலிவான மருந்துகளை இந்தியா தயாரிப்பதற்கு எதிரான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் ஸ்பெஷல் 301 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவுசார் சொத்துடைமை தொடர்பாக அமெரிக்கா ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிடும் இந்த அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை மீறலுக்காக கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்த்துள்ளது.

 

கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்டு உலக அளவில் விற்பனையாகும் மருந்துகளுக்கு இந்தியாவும் சீனாவும் மூலாதாரமாகத் திகழ்கின்றன. பிராண்ட் பெயர் மருந்துகளை காப்புரிமை விதிகளை மீறி அதன் வேதிப்பெயரில் (ஜானரிக்) தயாரித்து இந்தியாவும் சீனாவும் விற்பனை செய்கின்றன. மேலும் இந்திய சந்தையில் விற்பனையாகும் 20% மருந்துகள் கள்ளத்தனமாகத் தயாரிக்கப்படும் மருந்துகள் என்றும் அந்த அறிக்கையில் இந்தியா மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ள இந்தியா, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அறிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மத்தியச் சுகாதாரத்துறைச் செயலர் பிரீத்தி சுதன் இது தொடர்பாகக் கூறியதாவது:

 

என்ன அடிப்படைகளில் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்பது தெரியவில்லை. உலகிற்கே மருந்தகமாகத் திகழ்கிறது இந்திய மருந்து  உற்பத்தி, இதன் வளர்ச்சிக்கு எதிராகவும் வேதிப்பெயரில் அதிக விலையுள்ள மருந்துகளை குறைந்த விலைக்கும் விற்று வருவதற்கு  எதிரான குரலாகும் இது.

 

ஜானரிக் அல்லது வேதிப்பெயரில் விற்கப்படும் மருந்துகள் விலை மலிவானவை என்றாலும் தரத்தில் எந்த வித சமரசமும் கிடையாது. சான்றளிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x