Last Updated : 01 Apr, 2019 01:54 PM

 

Published : 01 Apr 2019 01:54 PM
Last Updated : 01 Apr 2019 01:54 PM

நான் பேசினேன்; ராகுல் மறுத்துவிட்டார்: கூட்டணி விவகாரத்தில் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தற்போது 7 தொகுதிகளும் பாஜக வசம் இருக்கின்றன. மத்தியில் ஆளும்  பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டு அவசியம் என்று ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினரும் விரும்புகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான பிரிவினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும் பாஜகவே மீண்டும் 7 தொகுதிகளில் வர வாய்ப்புள்ளது என்றும், ஒருவேளை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைந்தால், 4 இடங்கள் வரை அந்தக் கட்சிகள் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்து.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லி வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது கேஜ்ரிவால் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆம் ஆத்மி தயாராக இருந்தது. இதுதொடர்பாக நான் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அவர் கூட்டணிக்கு மறுத்துவிட்டார்.  ஷீலா தீட்சித் ஒன்றும் முக்கியமான தலைவர் அல்ல என்பதால் அவரைச் சந்திக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைவதற்கு மிகக்குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றன. இரு கட்சிகளின் நீண்டகால பயணங்களை ஆய்வு செய்கையில் இது சாத்தியமில்லை" எனத் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஒருவேளை இப்போது ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துவிட்டால், வரும் 2020-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தேர்தலில் எவ்வாறு காங்கிரஸ் சந்திக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.

மேலும் கேஜ்ரிவாலுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், சில இடங்கள் மட்டுமே கேஜ்ரிவால் வழங்குவார். அதனால், அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x