Last Updated : 30 Apr, 2019 05:10 PM

 

Published : 30 Apr 2019 05:10 PM
Last Updated : 30 Apr 2019 05:10 PM

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி: ரஃபேல் தீர்ப்பை மாற்றிப் பேசிய வழக்கு

ரஃபேல் ஒப்பந்த வழக்கின் தீர்ப்பை மாற்றிப் பேசியதாக பாஜக எம்.பி. தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

கடந்த இருமுறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் தான் பேசிய வார்த்தைக்கு வருத்தம் தெரிவிப்பதாக மட்டுமே ராகுல் காந்தி சார்பில் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த முறை மன்னிப்பு கோரப்பட்டது வரும் 6-ம் தேதிக்குள் மீண்டும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார்.

அவமதிப்பு வழக்கு

நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா  தலைமையிலான அமர்வு முன் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாங்கள் ராகுல் காந்தி கூறிய கருத்துகளைப் போல் ஏதும் கூறவில்லை. ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை 23-ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

ராகுல் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், " ரஃபேல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

2 முறை பிரமாணப்பத்திரம்

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சய் கண்ணா தலைமையிலான அமர்வு ராகுல் காந்திக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி சார்பில் நேற்று 28 பக்கங்கள் கொண்ட விளக்க மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் புதிதாக எந்த விஷயங்களும் சேர்க்கப்படவில்லை, முதல்முறையாக தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதையே ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். மன்னிப்பு கோராமல், வருத்தம் மட்டுமே தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு கோரினார்

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி ஆஜரானார்.

அவர் கூறுகையில், " கடந்த இருமுறை ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் வருத்தம் மட்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எங்கள் தரப்பில் 3 தவறுகள் நடந்துவிட்டன. அதற்கு நான் உளமாற மன்னிப்பு கோருகிறேன். சவுகிதார் என்ற வார்த்தையை கூறியதற்கு நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோருகிறேன் " என்று தெரிவித்தார்.

எங்கு குறிப்பிட்டு இருந்தீர்கள்

அதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " உங்களின் பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்தில் இந்த மன்னிப்பு வார்த்தையை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது கூறியதற்கும், பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்தமைக்கும் முரண்பாடு இருக்கிறது. நீங்கள் பேசுவதிலேயே முரண்பாடு இருக்கிறது. உங்கள் அறிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள், மறுபுறம் நீங்கள் மறுக்கிறீர்கள்.நீங்கள் இந்த பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் வாதிட்டால், உங்களுக்கு மூன்றாவது முறையாக சிறந்த பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கமாட்டோம் " என்றார்.

அதற்கு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, " நான் அகராதியை ஆய்வு செய்தேன் ரிக்ரெட் எனும் ஆங்கில வார்ர்த்தைக்கு மன்னிப்பு கோருதல் என்று பொருள் இருக்கிறது" என்றார்.

மனுதாரர் மீனாட்சி லெகி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதிடுகையில், " ராகுல் காந்தி நன்கு படித்தவர் என்று கூறுகிறார். ஆனால், பிரமாணப்பத்திரத்தில் நான் படிக்கவில்லை, நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யாமல் பேசிவிட்டேன் என்கிறார். இந்தவார்த்தையை  பேசிவிட்டு, 3 மணிநேரத்துக்கு பின் நடந்த கூட்டத்திலும் மீண்டும் அதே வார்த்தையை ராகுல் பேசினார். என்னவிதமான மன்னிப்பு குறித்து இவர் பேசுகிறார் " எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வரும் மே-6-ம் தேதிக்குள் ராகுல் காந்தி சார்பில் மூன்றாவது முறையாக புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x