Last Updated : 08 Apr, 2019 12:00 AM

 

Published : 08 Apr 2019 12:00 AM
Last Updated : 08 Apr 2019 12:00 AM

ஊழல்களில் மலிந்து கிடக்கிறது மேற்கு வங்கம்; மத்திய அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கிறார் மம்தா: மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் கூச் பிஹாரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு வங்க மாநிலம் ஊழல்களால் மலிந்து கிடக்கிறது. இங்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை. வன்முறை, போராட்டங்கள்தான் ஏராளமாக நடக்கின்றன.

மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால் அந்தத் திட்டங்கள் எதுவும் மேற்கு வங்க மக்களுக்குக் கிடைக்காமல் செய்துவிட்டார் மம்தா பானர்ஜி. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் ‘ஸ்பீட் பிரேக்கர்’ போல நிற்கிறார் அவர். குண்டர்கள் ஆதிக்கம்மேற்கு வங்க மாநிலத்தில் குண்டர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார் மம்தா. இதனால் அரசு மீது இருந்த மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. சாரதா சிட்பண்ட் ஊழல், ரோஸ் வேலி ஊழல், நாரதா ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடத்தப்பட்டு ஏராளமானோர் பணத்தை சுருட்டியுள்ளனர். சுருட்டப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும், காவலாளியான நான் கணக்கு கேட்பேன் என்று மக்களிடம் உறுதி கூறுகிறேன். இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு குறைந்த அளவு இடம் மட்டுமே ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.

அதிக அளவு மக்கள் இந்த கூட்டத்துக்கு வருவதைத் தடுக்க முயல்கிறார்மம்தா. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகளில் ஈடுபடும் மம்தா, எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறார்? மேற்கு வங்கத்தில் தனது அரசியல் செல்வாக்கை மம்தா வேகமாக இழந்து வருகிறார். மேலும் தனது வாக்குவங்கியைக் காப்பாற்ற சட்டவிரோதமாகக் குடியிருக்கும் வெளிநாட்டவர்களையும் மம்தா பாதுகாக்கிறார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது. விரைவில் நாட்டில் அனைத்து போன் அழைப்புகளையும் இலவசமாகத் தரப் போகிறோம். மேலும் உலகிலேயே குறைந்த செலவில் இன்டர்நெட் சேவையை வழங்கும் நாடாக இந்தியா மாறப் போகிறது.

நாட்டின் ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு வசதி உள்ளது. பெண்கள் எளிதாக சமையல் காஸ் இணைப்பைப் பெற முடிகிறது. இது அனைத்தும் பாஜக தலைமையில் அமைந்த மத்திய அரசால் மட்டுமே செய்யமுடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

திரிபுராவில் பிரச்சாரம்

திரிபுரா மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர்மோடி கூறியதாவது: என்னை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்குவர். திரிபுராவில் காலூன்ற திரிணமூல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால் அது நடக்காது. இடதுசாரிகளின் அட்டூழியங்களைத் தாங்கிக் கொண்ட திரிபுரா மக்கள் தற்போது பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நடுத்தர வகுப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர எதையும் கூறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x