Published : 07 Apr 2019 03:37 PM
Last Updated : 07 Apr 2019 03:37 PM

தேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக வேட்பாளர், நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பித்தார் மாவட்ட ஆட்சியர்

திருச்சூர் லோக்சபா தொகுதிக்கான பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதான குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

ரிடர்னிங் ஆபீசரான திருச்சூர் கலெக்டர் டி.வி.அனுபமா, இது தொடர்பான தன் அறிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பித்தார். வாக்குகள் சேகரிப்பதற்காக மதரீதியான உணர்வுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுரேஷ் கோபி மீறியதற்கான முதற்கட்ட ஆதாரம் இருப்பதாக அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக கேரளா தலைமைத் தேர்தல் அலுவலக தலைமைச் செயல் அதிகாரி தீகா ராம் மீனா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது,  மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார், அதில் சுரேஷ் கோபி நடத்தை விதிமீறல் செய்ததற்கான முதற்கட்ட ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார் என்றார்.

 

இந்த அறிக்கையில் சுரேஷ் கோபிக்கு திருப்தி ஏற்படவில்லை எனில் அவர் சி.இ.ஓவிடம் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக மேல்முறையீடு செய்யலாம்.

 

மீனா கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவோர் மீது அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டால் அது கிரிமினல் குற்றமாகும். போலீஸார் விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். சட்டம் என்பதே இல்லை என்பதல்ல, சட்டம் இருக்கிறது, அதற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை” என்றார்.

 

கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருச்சூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சபரிமலை ஐயப்பன் பெயரைக் குறிப்பிட்டு அவர் பேசியது, தேர்தல் நடத்தை விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

 

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் குரல் மாதிரிகள், வீடியோ ஒளிப்பதிவு ஆகியவற்றை தடய அறிவியலுக்கு அனுப்பினார்.  ஆனால் சுரேஷ் கோபி இதனை மறுத்தார், அனுபமா பாரபட்சமாகச் செயல்படுவதாக பாஜக அவரைக் குற்றம்சாட்டியது.

 

சபரிமலை விவகாரத்தை நடுநிலையுடன் குறிப்பிட்டுப் பேசலாம், ஆனால் வாக்கு சேகரிக்க மத உணர்வுகளைத் தூண்டுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று தேர்தல் அதிகாரி அலுவலகம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x