Published : 14 Apr 2019 01:10 PM
Last Updated : 14 Apr 2019 01:10 PM

அம்பை மாற்றிப் பிடித்த புகைப்படம்: மோடியைக் கிண்டல் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா

பிரதமர் மோடி அம்பை மாற்றிப் பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானதை வைத்து கிண்டல் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திவ்யா ஸ்பந்தனா.

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 13) தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந்தரராஜன் (தூத்துக்குடி), திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

அப்பொதுக்கூட்டத்தில் வில் ஒன்றை பிரதமர் மோடிக்குப் பரிசாக அளித்தார்கள். அதை வைத்துக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் போது வில்லை மாற்றிப் பிடித்திருந்தார் பிரதமர் மோடி. இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது.

இதனை காங்கிரஸ் கட்சியும் கிண்டல் செய்துள்ளது. இப்புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ள பதிவில், ''அங்கிள், எது முக்கியம் என்று பாருங்கள். குறைந்தது எப்போதோ ஒரு முறையாவது கேமராவைப் பார்ப்பதை விட்டுவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பாருங்கள். கண்டிப்பாக கேமரா உங்கள் நண்பனில்லை. அந்த உறவை முறித்துக் கொள்ளுங்கள். கடவுள் ராமரும் சந்தோஷமாக இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைப்பது திவ்யாவுக்கு முதன்முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமரை 'திருடன்' என்று விமர்சித்ததற்காக அவர் மீது தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x