Published : 19 Apr 2019 02:07 PM
Last Updated : 19 Apr 2019 02:07 PM

நக்சல் இயக்கம் பிறப்பிடமான நக்சல்பாரியில் 90 சதவீதம் வாக்குப்பதிவு

நக்சல் இயக்கத்தின் பிறப்பிடமான மேற்கு வங்கம் டார்ஜ்லிங்கில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில்  நேற்று நடந்த மக்களவைத் தொகுதி 2-ம் கட்ட தேர்தலில் 90 சதவீதம் வாக்குப்பதிவானது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜ்லிங் மாவட்டம், நக்சல்பாரி எனும் கிராமத்தில் கடந்த 1967-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி  நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. நக்சல்பாரி கிராமத்தில் கடந்த 1967-ம் ஆண்டு மே 25-ம் தேதி 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர்.  

இதைத் தொடர்ந்து எழுந்த விவசாயிகளின் பெரும் போராட்டம், சாரு மஜும்தார், கானு சன்யால் ஆகியோர் எழுப்பிய உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழுக்கத்தால், நக்சல்பாரி இயக்கம் தோன்றியது.

ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்வதன் மூலமே ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த முடியும், பொதுவுடைமையை நிலைநாட்டுவதே தங்களின் நோக்கம் என்று நக்சல்பாரி இயக்கத்தவர் அறிவித்தனர். இந்த இயக்கம் மேற்கு வங்கத்தில் இருந்து படிப்படியாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, தமிழகத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்த நக்சல்பாரி கிராமத்தில் தற்போது 906 பேர் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். இந்த 906 பேரில் நேற்று நடந்த மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்டவாக்குப்பதிவில் 90 சதவீதம் பேர் 827 பேர் வாக்களித்துள்ளனர். ஒரு காலத்தில் தேர்தலை புறக்கணித்த இந்த நக்சல்பாரி கிராம மக்கள்  ஆர்வத்துடன் 90 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

நக்சல்பாரி கிராமத்தின் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி பாபி தார் கூறுகையில், " ஒட்டுமொத்த மண்டலத்தில் நேற்றைய 2-ம் கட்டவாக்குப்பதிவில் 78  சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.

நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவரான அஸ்வின் பர்மன் கூறுகையில், " நக்சல்பாரி இயக்கத்தோடு நான் இப்போதுள்ள நிலையை ஒப்பிட்டால், இப்போது மிகவும் அமைதியாக இருக்கிறது, எந்தவிதமான தொந்தரவும் இன்றி இருக்கிறோம். அனைத்து கட்சிகளையும் பார்க்க முடிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் என அனைத்துக் கட்சியினரும் அமர்ந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்தவர்களுக்காகவும், கொல்லப்பட்டவர்களுக்காகவும் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே எழுப்பியுள்ளார்.

நக்சல்பாரி இயக்கத்தில் கடந்த 1967-ம் ஆண்டு ஈடுபட்டவர் சாந்தி முண்டா. இவர் நக்சல்பாரி கிராமத்துக்கு அருகே இருக்கும் ஹதிஹிசா பகுதியில் இருக்கிறார். இவரும் வாக்களிக்க நக்சல்பாரி கிராமத்துக்குத்தான் வரவேண்டும்.

இவர் சிபிஐ(எம்எல்) சார்பில் கடந்த 1982, 1987ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறமுடியவில்லை. ஒருநேரத்தில் நக்சலைட் தலைவர் கனு சாயலுக்கு உதவியாக சாந்தி முண்டா இருந்தார்.

இப்போதுள்ள அரசியல் கட்சிகள் மீது வெறுப்புடன் இருந்தாலும் சாந்தி முண்டா ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார். அவர் கூறுகையில், " தேர்தலைப் புறக்கணிப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை அதனால், வயதான காலத்திலும் நடந்து வந்து வாக்களித்தேன்" எனத் தெரிவித்தார்.

அதேசமயம், நக்சல்பாரி இயக்கத்தை தோற்றுவித்த மஜூம்தார் மீது நம்பிக்கையுடன் இருக்கும் கிராமத்தினர் சிலர் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.

நக்சல்பாரி கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த  வாக்குப்பதிவு மையத்தில் இருநது 100மீட்டருக்கு உள்ளாகவே 85 வயதான பவான்சிங் வீடு அமைந்திருந்தும் அவர் வாக்களிக்கச் செல்லவில்லை. நக்சல்பாரி இயக்கம் தோன்றுவதற்கு காரணமான பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தானேஸ்வரி தேவியின் மகன்தான் பவான் சிங்.

 பவான் சிங் கூறுகையில், " எதற்காக நான் வாக்களிக்க வேண்டும், யாருக்காக வாக்களிக்க வேண்டும். சாரு மஜூம்தாரின் கொள்கைகளை யார் பின்பற்றுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x