Last Updated : 27 Apr, 2019 10:31 AM

 

Published : 27 Apr 2019 10:31 AM
Last Updated : 27 Apr 2019 10:31 AM

சமோசாவில் ஆலு உள்ளவரை பிஹாரில் லாலு: ஒரு சிறப்புப் பார்வை

பிஹாரின் தலைநகரான பாட்னா. இங்கு 1970-ம் ஆண்டு ஒரு அரசியல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல தலைவர்கள் கூடியிருக்க, பிஹாரின் முன்னாள் முதல்வர் கற்பூரிதாக்கூரும் அங்கு இருந்தார்.

அப்போது அவர் ஒரு மூலையில் கைகட்டி நின்று கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து, ‘இவன் எதிர்காலத்தில் ஒரு பெரிய தலைவனாக வருவான். அந்த அளவுக்கான பேச்சுத் திறமை அவனிடம் இருக்கிறது’ என குறிப்பிட்டு அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினார் தாக்கூர். தாக்கூரின் வாக்கு பலிக்கும்படி நடந்து கொண்டிருக்கும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜார்கண்ட் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் (70).

பாட்னா பல்கலைக்கழகத்தில் பியூனாக இருந்த லாலுவின் மூத்த சகோதரர், அவரின் திறமையைக் கண்டு வியந்து கல்வி பயில அப்பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். பாட்னா பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் 1970 ஆம் ஆண்டு போட்டியிட்ட லாலு அதன் பொதுச்செயலாளரானதைக் கண்டு பலரும் வியந்தனர்.  காரணம், உயர்ந்த சமூகம் அல்லது பணபலம் என எதுவும் இன்றி அந்தப் பதவிக்கு எவரும் வந்தது கிடையாது. மீண்டும் 1973-ல் அம்மாணவர் பேரவையின் தலைவராக லாலு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில், குஜராத்தின் அகமதாபாத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் 1974-ல் தொடங்கிய விலைவாசி உயர்வுப் போராட்டத்தை பிஹாரில் எடுத்தார் லாலு. இதன்மூலம் அவருக்கு ஜனதா கட்சித் தலைவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. இதில், முதன்முறையாக பிஹார் மாணவர்கள் மற்றும் பெண்களையும் சேர்த்தார். அன்று முதல் சூடு பிடித்த லாலுவின் அரசியல் வாழ்வு, கால்நடைத் தீவன வழக்குகளில் சிக்கிய நிலையிலும் தொடர்கிறது.

இதற்கிடையே இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்த போது, மிசா சட்டத்தில் கைதானார் லாலு. அதற்கு முன்பாக லாலுவின் வாழ்க்கை துணைவியாக ராப்ரிதேவி ஜூன் 1973-ல் அவரது கரம் பிடித்திருந்தார். ஆனால் மனம் தளராத லாலு, சிறையில் இருந்த போது தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு மிசா பாரதி என பெயரிட்டார். பிறகு 1977-ல் மக்களவை தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்க சப்ரா தொகுதி எம்.பி.யான லாலுவிற்கு அப்போது வயது 29.

ஆனால், சப்ராவில் லாலுவிற்கு 1980 மக்களவைத் தேர்தலில் தோல்வி கிடைத்தது. எனினும், அதே வருடம் பிஹாரின் மதேபுரா தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவரது அரசியல் வாழ்வில் ஏறுமுகம் தொடர்ந்தது.  இரண்டாம் முறையாக மதேபுரா எம்எல்ஏவான அவரது திறமையான பேச்சால்  பிஹார் சட்டப்பேரவையின் புயலாக லாலு கருதப்பட்டார்.  தனது குருவான கற்பூரிதாக்கூர் 1987 ஆம் ஆண்டு இறந்த பிறகு அவர் வகித்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி லாலுவிற்கு கிடைத்தது.

அன்று முதல் பிஹாரின் முதல்வர் பதவியைக் குறி வைத்தவருக்கு, அடுத்த மூன்றாவது ஆண்டில் அப்பதவி கிடைத்தது. அப்போது லாலுவை விட மூத்த தலைவர்களும், பிரதமராக இருந்த வி.பி.சிங்கால் ஆதரிக்கப்பட்டவர்களுமான ராம் சுந்தர்தாஸ் மற்றும் ரகுநாத் ஜா ஆகியோரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள லாலு செய்த சாணக்யத்தனத்தால், ஒரு முறை பாஜக உடைந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உருவானது. இன்னொரு முறை பிஹார் மாநிலமே உடைந்து ஜார்கண்ட் எனும் புதிய மாநிலம் உருவானது.  இது போன்ற வேலைகளையே முதன்மையாக எடுத்துச் செய்த லாலு, 1997-ல் முதன்முறையாக கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிபிஐ தன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய, லாலு சிறைக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது கூட தனது அரசியல் மூளையை சரியாகப் பயன்படுத்தி, மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு.

ராப்ரிதேவியின் முதல்வர் அதிகாரங்களை தன் கையில் வைத்துக் கொண்டார் லாலு. இதை தனது சிறை வாழ்க்கைக்கும் அவர் பயன்படுத்தத் தவறவில்லை.

பாட்னாவின் பியூர் மத்திய சிறையில் வெறும் மூன்று நாட்கள் இருந்தவரை ராப்ரி அரசு, பாதுகாப்பைக் காரணம் காட்டி, புல்வாரி சிறைக்கு மாற்றியது. பாட்னாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள புல்வாரியில், பிஹாரி மிலிட்டரி போலீஸ் எனும் சிறப்பு படையின் பட்டாலியன் 9-ஐ 'கேம்ப் ஜெயில்' என மாற்றியது.

எந்த அரசாலும் செய்ய முடியாத வகையில், புல்வாரி சிறையின் பெயரில் லாலுவிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. லாலுவின் சமையல்காரர் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை என சகலவசதிகளுடன் அந்த சிறை, ஒரு விருந்தினர் மாளிகையாக மாறியது.  இங்கிருந்தபடி லாலு, தனது அரசுடன் சேர்த்து கட்சியையும் நிர்வாகித்தார். அரசு அதிகாரிகள் ராப்ரிக்கான கோப்புகளுடன் லாலுவைக் காண அன்றாடம் வரிசையில் நின்றனர். கட்சியினரும் தம் பிரச்சினைகள் மீது ஆலோசிக்க லாலுவைச் சந்தித்தனர்.

இங்கு அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் லாலு அவ்வப்போது நடத்தத் தவறவில்லை. காவல் நிலையத்தில் வழக்குகளை அதிகம் பதிவு செய்யாமல் பார்த்துக் கொண்டார். சட்டம்-ஒழுங்கு மீதான செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அரசின் தேசியக் குற்றப்பதிவேட்டில் இடம்பெறாத புள்ளிவிவரங்களைக் காட்டி தப்பி வந்தார். இதனால், தொடர்ந்த அதிகமான கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் போன்றவற்றை லாலுவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனினும், ‘சமோசாக்காளில் ஆலு (உருளைக்கிழங்கு) உள்ள வரை, பிஹாரில் இந்த லாலு இருப்பான்’ என நகைச்சுவையாக அடிக்கடி வசனம் பேசி வந்தார். பொறுமை இழந்த பிஹார்வாசிகள் 2005 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் லாலு ஆட்சியைத் தூக்கி எறிந்து அங்கு நிதிஷ்குமாரை முதல்வராக்கினர்.

உயர் சமூகத்தினரின் பிடியில் சிக்கியிருந்த பிஹாரில், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகத்தான் லாலு முதல்வர் ஆனார். இரண்டாவது முறை வெற்றியில் அவர் தம் குடும்பம் மற்றும் தனது யாதவர் சமூகத்தினரை மட்டும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினார். இதனால் மூன்றாவது முறை ஆட்சியைப் பிடிக்க அவருக்கு தனது ஆள் பலம் காட்ட வேண்டி இருந்தது. இதற்கு அவரது மைத்துனர்களான சாது யாதவும், சுபாஷ் யாதவும் துணை இருந்தனர்.

ஆனால் நான்காவது முறை கே.ஜே.ராவ் எனும் தனது அதிகாரி மூலம் மத்திய தேர்தல் ஆணையம் அளித்த விதிமீறல் நெருக்கடியை லாலுவால் தாங்க முடியவில்லை. இதை முன்கூட்டியே அறிந்ததாலோ, என்னவோ, 2004-ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.யாகி தன் அரசியல் ஜாகையை டெல்லிக்கு மாற்றினார் லாலு.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்து, ஒரு புதிய அவதாரத்தை எடுக்க முயன்றார். உள்துறை அமைச்சகம் வேண்டும் என பிடிவாதம் பிடித்தவருக்கு கிடைத்தது ரயில் அமைச்சகம். விளைவு, பிஹாரில் ஜீரோவான லாலு, டெல்லியில் ஹீரோவானார். உலகில் பல முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகளை உருவாக்கும் அகமதாபாத்தின் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வகுப்பு நடத்தும் அளவிற்கு லாலுவின் தரம் உயர்ந்தது.

இந்த உயர்விற்கு தடை விதிக்கும் வகையில் 2013-ல் கால்நடை தீவன வழக்கை விசாரித்த ஜார்கண்டின் சிபிஐ நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதில், லாலு குற்றவாளி என நிரூபிக்கப்படவே அவர் சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. இதில் லாலுவிற்கு மூன்று வருடங்களுக்கும் மேல் தண்டனை கிடைத்ததால் அவரது எம்.பி. பதவியும் பறிபோனது. ஏற்கெனவே, ரத யாத்திரையுடன் பிஹாரில் நுழைந்த போது அத்வானியைக் கைது செய்த லாலுவுக்கு மத நல்லிணக்கவாதி என்ற பெயரும் உண்டு.  இப்படிப்பட்டவரை காப்பாற்றி வைத்தால் நமக்கு பயனாக இருப்பார் எனக் கருதியது காங்கிரஸ். இதற்காக ஊழல் வழக்கில் தண்டனை அடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது எனும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, சட்டம் கொண்டுவர முயன்றனர்.

ஆனால், காங்கிரஸின் மூக்கு உடைந்தது தான் மிச்சம் என்றாகி, லாலு 2013-ல் தன் எம்.பி. பதவியை இழந்தார். அதன் பிறகு அவர் தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, பாஜக ஆதரவில் முதல்வரான நிதிஷ், 2014-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்தார். இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்.

பிறகு ஜாமீனில் வந்த லாலுவுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தார். இதன் பலனால் 2015-ல் மெகா கூட்டணியின் தனிமெஜாரிட்டி வெற்றியால் மீண்டும் முதல்வரானார் நிதிஷ்.  லாலுவின் இளைய மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் துணை முதல்வராகவும், மூத்த மகன் மாநில அமைச்சராகவும் மூத்த மகள் மிசா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆனார்கள். ராப்ரிக்கு பிஹாரின் மேலவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கால்நடைத்தீவன வழக்குகளில் நான்கின் தீர்ப்பு வெளியாகி அனைத்திலும் லாலு சிக்கி விட்டார். இதனால், அவருக்கு மொத்தம் இருபத்து ஏழரை ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அதற்காகவும் கைதானார் லாலு. இவற்றின் மேல்முறையீட்டு வழக்குகள் ஜார்கண்டின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றின் ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளதால் லாலுவின் சிறைவாசம் தொடர்கிறது.

இதை எதிர்பார்த்ததாலோ, என்னவோ பிஹார் அரசியலைத் தொடர தனது குடும்பத்தாரை தயாராக்கி விட்டார் லாலு. இவரது கைதால் மெகா கூட்டணியில் இருந்து வெளியேறியது முதல்வர் பதவியையும் இழந்தார் நிதிஷ். மீண்டும் பாஜகவுடன் கைகோத்து பிஹார் முதல்வரானார்.

ரயில் அமைச்சராக இருந்த போது லாலு, ''ஒரு மாட்டை அடக்க வேண்டுமானால் அதன் வாலைப் பிடிக்காமல், கொம்பைப் பிடிக்க வேண்டும். அதே போல் முழுமையாக பால் கறக்கப்படாத மாடு நோயில் படுத்துவிடும். இவை, சிறு வயதில் நான் மாடு மேய்க்கச் செல்லும் போது என் தாய் கூறியது. அதை தான் நான் ரயில் அமைச்சகத்தில் பயன்படுத்தி லாபகரமாக்கினேன்'' எனக் கூறி வந்தார்.

ஆனால், அதே மாட்டிற்கான தீவனப் பணத்தில் ஊழல் செய்ததாக லாலு மீது பதிவான வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தது. இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு இல்லாமல் இந்த முறை மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது பிஹார்.

உடல்நலக்குறைவு என ஜார்கண்டின் ராஞ்சி அரசு மருத்துவமனையில் இருந்தபடி லாலு தன் கட்சித் தலைவர் பதவியிலும் தொடர்கிறார். தனது இளையமகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் உதவியுடன், பிஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியும் அமைத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களில் லாலுவின் திறன் உச்சமாகக் கருதப்படுவதில் அவரது அரசியல் பின்னணி பார்க்கப்படுகிறது. மே 23-ல் வெளியாகும் மக்களவைத் தேர்தலின் முடிவுகளில் ஆட்சி மாறினால், லாலுவின் அரசியல் காட்சிகள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x