Published : 08 Mar 2019 06:00 PM
Last Updated : 08 Mar 2019 06:00 PM

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகல்: பாஜகவுக்கு தாவல்

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில், 182 இடங்களில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ குன்வர்ஜி பவாலியா கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்து அதே தினத்தில் அமைச்சரானார். பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா படேல் காங்கிரஸில் இருந்து கடந்த மாதம் விலகினார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் பலம், 75-ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். மனவதார் தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜவகர் சவ்டா, சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார்.

அவர் பின்னர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜூனாகட் மாவட்டத்தைச் சேர்ந்த பல மிக்க காங்கிரஸ் தலைவரான பெதாலிஜி சவ்டாவின் மகன் ஜவகர் சவ்டா என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x