Published : 30 Mar 2019 07:48 PM
Last Updated : 30 Mar 2019 07:48 PM

வரதட்சணை கொலை வழக்கு: சோறு போடாமலே செய்த கொடுமை; இறக்கும் போது 20 கிலோ எடை மட்டுமே இருந்த பெண் - பரபரப்பு விசாரணை தொடங்கியது

கொல்லம் மாவட்டத்தில் ஓயூரில்  சோறு போடாமலேயே பட்டினி போட்டு 27 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதான புகாரின் அடிப்படையில் கேரள மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.  இந்த விவகாரம் கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

 

மகளிர் ஆணையத்தின் தலைவர் எம்.சி. ஜோசப்பைன்  தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது,  சட்ட விரோதமாக்கப்பட்டு நீண்ட காலமாகியும் இந்த வரதட்சணைக்கொடுமை என்ற தீங்கு இன்னும் நிலவி வருகிறது, இந்த கொடுமை பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

அதாவது கேரளாவில் வீடு என்பதே பெண்களுக்கு பெரும் அபாயகரமான இடமாகி வருகிறது, காரணம் பெருகிவரும் குடும்ப வன்முறைகள். பெரும்பாலும் குற்றவாளிகள் கணவராகவோ, அவரது உறவினர்களாகவோ இருக்கின்றனர் என்று ஜோசப்பைன் வேதனையுடன் தெரிவித்தார்.

 

மார்ச் 21ம் தேதி கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் மனைவி துஷாராவை மிகவும் மெலிந்த நிலையில், மயக்கமடைந்த நிலையில்  கணவன் சந்த்து லால் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது  விவகாரம் அம்பலமானது.

 

மெலிந்து போய் எலும்பும் தோலுமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிப்பு:

 

மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே மருத்துவர்கள் இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலை பிரேதப்பரி சோதனைக்கு அனுப்பினர்.

 

அப்போதுதான் மிகவும் கொடூரமான சம்பவங்கள் தெரியவந்ததாக புயபல்லி சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் தெரிவித்தார். துஷாரா என்ற பரிதாபத்துக்குரிய, 2 குழந்தைகளுக்குத் தாயான, அந்த 27 வயது பெண்மணியைப் பட்டினி போட்டுள்ளனர், அவர் நியுமோனியா நோய் பாதிக்கப்பட்டுள்ளார்.  துஷாராவின் உடலில் பல இடங்களில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான காயங்களை மருத்துவர்கள் கண்டனர். கைகளிலும் காயங்கள் ஆறிய வடு தெரிந்தது.

 

கருநாகப்பள்ளியைச் சேர்ந்த துஷாரா என்ற இந்தப் பெண் 2013-ம் ஆண்டு லால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் லாலின் உறவினர்கள் தொடர்ந்து துஷாராவிடம் ரூ. 2 லட்சம் தொகையினை வரதட்சணையாகக் கேட்டு வலியுறுத்தியுள்ளனர்.  துஷாராவின் குடும்பத்திடம் கஷ்டப்படும் குடும்பம் பணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துள்ளனர்.

 

இந்நிலையில் 2016 முதலே துஷாராவுடன் தொடர்பை குடும்பத்தினர் இழந்துள்ளனர். தன்னுடைய 5 செண்ட் பிளாட்டில் பெரிய தகரத் தட்டிகளை எழுப்பி அக்கம்பக்கத்தினர் எதுவும் பார்க்க முடியாத படி செய்துள்ளான் கணவன் லால்.

 

கொட்டாரக்காரா உதவி எஸ்.பி. தினில் ராஜ் இந்த வழக்கை விசாரித்து வருபவர் கூறும்போது,  துஷாரா இறக்கும் போது வெறும் 20 கிலோ எடைதான் இருந்துள்ளார் என்றார். வெறும் சர்க்கரையும், சமைக்காத ஈர அரிசியையும் துஷராவுக்கு அவரது கணவன் உணவாக அளித்துள்ளான்.

 

இந்நிலையில் கணவன் லாலையும் இவனது தாயாரையும் போலீஸார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

 

விசாரணையை முடுக்கி விட்டுள்ள கேரள மகளிர் ஆணையத் தலைவர் ஜோசப்பின் கூறும்போது, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது, இதில் பெரும்பங்கு வரதட்சணை என்ற கொடுமைக்கே உள்ளது என்றார்.  அனைவரும் குடும்ப சிக்கல்கள் காரணமாக தாமதமாகவே புகார் அளிக்கின்றனர், இப்போது வரும் வழக்குகளெல்லாம் பெரும் பனிப்பாறையின் முகடு மட்டுமே. இதனை நாங்கள் சும்மா விடப்போவதில்லை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x